இதுவரை இல்லாத அளவாக உலக சாம்பியனுக்கு ரூ.20 கோடி பரிசு: ஐசிசி அறிவிப்பு

துபாய்: உலக கோப்பை டி20 தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு, வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக ரூ.20 கோடி பரிசளிக்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் 9வது உலக கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்று லீக் சுற்றில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், இத்தொடருக்கான பரிசு விவரத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. முதலிடம் பிடித்து கோப்பையை முத்தமிடும் அணிக்கு ரூ.20 கோடி வழங்கப்பட உள்ளது. பைனலில் தோற்று 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.10 கோடி கிடைக்கும்.

அரையிறுதியுடன் வெளியேறும் 2 அணிகளுக்கு தலா ரூ.5.5 கோடி உள்பட 5 முதல் 20 இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கும் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இந்த தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.93 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஐசிசி தலைமை செயலதிகாரி ஜெப் அல்லார்டைஸ், ‘நடப்பு உலக கோப்பை டி20 தொடர் பல்வேறு வகையில் வரலாற்று சிறப்பு மிக்கதாகும். எனவே, பரிசுத் தொகையையும் அதற்கேற்ப வழங்குவதே பொருத்தமானதாக இருக்கும். இதில் பங்கேற்கும் வீரர்களின் திறமையான ஆட்டம் உலகம் முழுவதும் உள்ள கோடிக் கணக்கான கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தும் என நம்புகிறோம்’ என தெரிவித்துள்ளார்.

* கோஹ்லிக்கு விருது
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 2023ம் ஆண்டுக்கான ஐசிசி சிறந்த வீரர் விருது இந்திய நட்சத்திரம் விராத் கோஹ்லிக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த அணியாகவும் இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த வீரருக்கான ஐசிசி விருது மற்றும் சிறந்த அணிக்கான தொப்பியுடன் கோஹ்லி உற்சாகமாக போஸ் கொடுக்கிறார்.

The post இதுவரை இல்லாத அளவாக உலக சாம்பியனுக்கு ரூ.20 கோடி பரிசு: ஐசிசி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: