மும்பையில் இன்று பேஷன்ஷோவில் பங்கேற்கும் லியோனல் மெஸ்சி: பாலிவுட், விளையாட்டு பிரபலங்கள் சந்திப்பு

மும்பை: அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்சி 3 நாள் பயணமாக நேற்று அதிகாலை இந்தியா வந்தார். கோட் இந்தியா டூர் 2025 என்ற பயண திட்டத்தின் படி 14 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வந்துள்ள அவர் நேற்று கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் தனது 70 அடி உயர சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து சால்ட் லேக் ஸ்டேடியத்தில் ரசிகர்களை சந்தித்தார். இதில் நடிகர் ஷாருக்கான் உள்ளிட்டோர் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

சுமார் 22 நிமிடங்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சி நடந்ததால் ரூ.4ஆயிரம் முதல் 12ஆயிரம் ரூபாய் விலை கொடுத்து டிக்கெட் வாங்கி இருந்த ரசிகர்கள் அவரை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்து வன்முறையில் ஈடுபட்டனர். கொல்கத்தா நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ஐதராபாத் வந்த மெஸ்சி, அங்கு நடந்த காட்சி கால்பந்து போட்டியில் கலந்துகொண்டார். இதில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் கலந்துகொண்டு ஆடினார். மெஸ்சியுடன் அர்ஜென்டினா கால்பந்துவீரர் ரோட்ரிகோ டி பால், உருகுவே வீரர் லூயிஸ் சுவாரெஸ் ஆகியோரும் கால்பந்து ஆடினர்.

இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்டார். அவருக்கு அர்ஜென்டினா அணியின் ஜெர்சியை மெஸ்சி பரிசாக வழங்கினார். மேலும் காட்சி போட்டியில் வெற்றிபெற்ற ஆர்ஆர் 9 அணிக்கு கோப்பையை வழங்கி பாராட்டினார். ஐதராபாத்தில் இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும், கூட்டத்தினரின் அன்பிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் மெஸ்சி கூறினார். மேலும் ரசிகர்களை நோக்கி கால்பந்தை அடித்து குஷிபடுத்தினார். நேற்றிரவு ஐதராபாத் நட்சத்திர ஓட்டலில் தங்கிய மெஸ்சி, ரோட்ரிகோ டி பால், உருகுவே வீரர் லூயிஸ் சுவாரெஸ் ஆகியோர் இன்று காலை மும்பை சென்றடைந்தனர். அங்கு இன்று மாலை 4.30 மணிக்கு இந்திய கிரிக்கெட் கிளப்பில் நடக்கும் நிகழ்ச்சியில் மெஸ்சி பங்கேற்கிறார்.

இதில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோஹ்லி மற்றும் கால்பந்துவீரர்கள் கலந்து கொள்கின்றனர். மாலை 5 மணிக்கு வான்கடே ஸ்டேடியத்தில் கிக் ஆப் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் நடிகர்கள் ஜாக்கி ஷெராப், ஜான் ஆபிரகாம், நடிகை கரீனா கபூர் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர். மேலும் தொண்டு நிறுவனத்தின் நல நிதிக்காக பேஷன் ஷோ நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மெஸ்சி ஒய்யாரமாக வலம் வருகிறார். மேலும் 2022 கத்தார் உலக கோப்பையின் போது பயன்படுத்திய சீருடை, கால்பந்து உள்ளிட்ட பொருட்களின் ஏலம் நடக்கிறது. கால்பந்து காட்சி போட்டியிலும் மெஸ்சி பங்கேற்கிறார். நாளை டெல்லி செல்லும் மெஸ்சி, அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார்.

Related Stories: