முதுகுளத்தூர் அருகே தொட்டுவிடும் தூரத்தில் மின்கம்பியால் அபாயம்: மாற்றி அமைக்க கோரிக்கை

 

சாயல்குடி, ஜூன் 3: முதுகுளத்தூர் அருகே கடம்பன்குளம், மேலமானாங்கரை, துளுக்கன்குறிச்சி, மரவெட்டி, எம்.சாலை ஆகிய 5 கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களுக்கு செல்ல முதுகுளத்தூர் – கடலாடி சாலையோரம் உள்ள நீதிமன்றம் எதிர்புறத்திலிருந்து சாலை செல்கிறது. இச்சாலையோரத்தில் தெருக்கள் மற்றும் கண்மாய் கரை, விவசாய நிலப்பகுதியில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பங்கள் சுமார் 40 வருடங்களுக்கு முன்பாக நடப்பட்டவைஆகும்.

இந்நிலையில் புதிய தார்ச்சாலை, தெருச்சாலைகள் அமைக்கப்பட்டதால், இப்பகுதியில் சாலையின் உயரம் அதிகரித்து விட்டது. இதனால் மின்கம்பங்களுக்கிடையே செல்லும் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக தொங்குகிறது. இதனால் கனரக வாகனங்கள், தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ், மண் அள்ளும் வாகனம், விவசாய அறுவடை காலத்தில் கதிர் அறுக்கும் வாகனம் உள்ளிட்டவை வந்தால் உரசி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

இதேபோல் இறுதிச்சடங்கு வாகனம் செல்ல முடியாமல் இறந்தவர்கள் உடலை அந்த பகுதியில் கைகளில் சுமந்து செல்லும் நிலை தொடர்கிறது. எனவே கண்மாய், பிரதான சாலை வழியில் தொட்டுவிடும் தூரத்திற்கு மிகவும் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை விரைந்து மாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post முதுகுளத்தூர் அருகே தொட்டுவிடும் தூரத்தில் மின்கம்பியால் அபாயம்: மாற்றி அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: