டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர்; முதல் போட்டியில் அமெரிக்கா வெற்றி: ஆரோன் ஜோன்ஸ் அதிரடியில் கனடாவை வீழ்த்தியது

டாலஸ்: 9வது ஐசிசி டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் அமெரிக்காவில் நடக்கிறது. இதில் மொத்தம் 20அணிகள் இடம்பெற்றுள்ளன. தலா 5 அணிகள் என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று போட்டி நடத்தப்படுகிறது. இந்த 4 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். உலக கோப்பையில் முதல் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு அமெரிக்காவின் டாலஸ் மைதானத்தில் தொடங்கி நடந்தது. இதில் அமெரிக்கா-கனடா அணிகள் மோதின.

டாஸ் வென்ற அமெரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த கனடா அணியில், ஆரோன் ஜான்சன் 16 பந்தில் 23 ரன் எடுத்து அவுட் ஆக மற்றொரு தொடக்க வீரர் நவ்நீத் தலிவால் 44 பந்தில் 61 ரன் அடித்தார். மிடில் ஆர்டரில் நிக்கோலஸ் கிர்டன் 51 (31 பந்து), ஷ்ரேயாஸ் மொவ்வா 32 ரன் (16 பந்து) எடுத்தனர். 20 ஓவரில் கனடா 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன் எடுத்தது.

பின்னர் 195 ரன் இலக்கை துரத்திய அமெரிக்க அணியில் ஸ்டீவன் டெய்லர் 0, கேப்டன் மோனாங்க் படேல் 16 ரன்னில் அவுட் ஆகினர். அடுத்து வந்த ஆண்ட்ரிஸ் கௌஸ் 46 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 65 ரன் எடுத்து அவுட் ஆனார். மறுபுறம் அதிரடியாக ஆடிய ஆரோன் ஜோன்ஸ் ஆட்டம் இழக்காமல் 40 பந்தில், 4 பவுண்டரி, 10 சிக்சருடன் 94 ரன் விளாசினார். 3வது விக்கெட்டிற்கு இந்த ஜோடி 131 ரன் குவித்தது. 17.4 ஓவரில் 3 விக்கெட் இழந்து 197 ரன் எடுத்த அமெரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆரோன் ஜோன்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

The post டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர்; முதல் போட்டியில் அமெரிக்கா வெற்றி: ஆரோன் ஜோன்ஸ் அதிரடியில் கனடாவை வீழ்த்தியது appeared first on Dinakaran.

Related Stories: