உலக கோப்பை பயிற்சி ஆட்டம் இந்தியா – வங்கதேசம் இன்று பலப்பரீட்சை

நியூயார்க்: ஐசிசி டி20 உலக கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா – வங்கதேசம் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் உலக கோப்பை டி20 தொடர் நாளை கோலாகலமாகத் தொடங்க உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோத உள்ளன. இந்த சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் 8’ சுற்றில் பலப்பரீட்சை நடத்த வேண்டும். அதன் பிறகு ஜூன் 24ம் தேதி அரையிறுதி ஆட்டங்களும், ஜூன் 29ம் தேதி பிரிட்ஜ்டவுனில் பைனலும் நடக்க உள்ளன. இத்தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் மே 27ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நியூயார்க்கின் நஸாவ் கவுன்டி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய நேரப்படி இன்று இரவு 8.00 மணிக்கு தொடங்கும் கடைசி பயிற்சி ஆட்டத்தில் இந்தியா – வங்கதேசம் மோதுகின்றன. சமீபத்தில் அமெரிக்க அணியுடன் நடந்த டி20 தொடரில் வங்கதேசம் 1-2 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்த நிலையில், பலம் வாய்ந்த இந்திய அணியுடன் நடக்கும் இன்றைய பயிற்சி ஆட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள், ஐபிஎல் தொடருக்கு பிறகு களமிறங்கும் முதல் ஆட்டம் இது. அமெரிக்க ஆடுகளங்களின் தன்மை, ரோகித் ஷர்மாவுடன் இணைந்து இன்னிங்சை தொடங்கும் வாய்ப்பு யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு கிடைக்குமா?, நடு வரிசையில் அதிரடி வீரர்கள் சஞ்சு சாம்சன், ஷிவம் துபே இடம் பெறுவார்களா? வேகப் பந்துவீச்சில் பும்ராவுடன் கூட்டணி வைக்கும் வாய்ப்பு அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் இருவரில் யாருக்கு? என பல்வேறு அம்சங்கள், கேள்விகளுக்கான வியூகங்களும், விடைகளும் இந்த போட்டியின் மூலம் தெளிவாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். அதே சமயம் முஸ்டாபிசுர் ரகுமானின் வேகமும், ஷாகிப் அல் ஹசன் மற்றும் மஹேதி ஹசன் சுழலும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும்.

 

The post உலக கோப்பை பயிற்சி ஆட்டம் இந்தியா – வங்கதேசம் இன்று பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Related Stories: