மதுரை, மே 29: ரேஸ்கோர்ஸ் நீச்சல்குளத்தில் கோடைகால நீச்சல் கற்றல் வகுப்பில் தேறியவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. கோடை காலத்தை பயனுள்ள வழியில் செலவழிக்கும் விதமாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மதுரைக்கிளை சார்பில் கடந்த ஏப்ரல் 2ம் தேதி கோடைகால நீச்சல் கற்றல் பயிற்சி வகுப்பை துவக்கியது. இந்த பயிற்சியை பெறுபவர்கள் 8 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும் உயரம் 125 செ.மீ.க்கு மேல் இருப்பவர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டனர்.
தற்போது பல்வேறு பேட்சுகள் முடிந்து சுமார் 300க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் நீச்சலை கற்றுத் தேறியுள்ளனர். காலை 7.30 மணிக்கு துவங்கும் நீச்சல் பயிற்சியானது ஒரு மணிநேரம் இடைவெளிக்கு ஒரு பேட்ஜ் 12 நாட்கள் என நிர்ணயிக்கப்பட்டது. மாலை 5.30 மணி வரை உரிய பயிற்சியாளர்களை கொண்டு கற்றல் பயிற்சி ஒவ்வொரு நாளும் நடந்து வந்தது.
தற்போது நீச்சல் கற்றல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 120 பேருக்கு சான்றிதழ் வழங்கும் விழா நேற்று நீச்சல்குளத்தில் நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் தலைமையில் தடகளபயிற்சியாளர் ரஞ்சித்குமார், ரிசர்வ் லைன் ஹாக்கி கிளப் செயலாளர் கண்ணன் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தனர். இந்த கற்றல் பயிற்றுனர்களுக்கு பாதுகாப்பு அரணாக துணை நின்ற உயிர்காப்பாளர்கள் பாராட்டப்பட்டனர்.
The post கோடைகால நீச்சல் கற்றல் வகுப்பில் தேறியவர்களுக்கு சான்றிதழ் வழங்கல் appeared first on Dinakaran.