உலக கோப்பைக்கு தயாராவதில் தடுமாறும் முன்னணி அணிகள்: அசத்தலாக விளையாடும் அமெரிக்கா

புளோரிடா: ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்கு முன்னோட்டமாக அமைந்த தொடர்களில் தென் ஆப்ரிக்கா, வங்கதேசம் போன்ற முன்னணி அணிகள் தோல்வியை சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐசிசி டி20 ஆண்கள் உலக கோப்பை போட்டி ஜூன் 2ம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான பயிற்சி ஆட்டங்கள் தொடங்கி உள்ளன.

ஐபிஎல் போட்டியில் பல்வேறு நாடுகளின் முன்னணி வீரர்கள் பங்கேற்றதால், உலக கோப்பைக்கு தயாராவதற்கு குறைந்த அவகாசமே உள்ளது. சில அணிகள் மட்டுமே இருதரப்பு சர்வதேச தொடர்களில் விளையாடின. தென் ஆப்ரிக்காவுடன் மோதிய முன்னாள் உலக சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் ஹாட்ரிக் வெற்றியுடன் 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து அசத்தியது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து – முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் இடையே 4 ஆட்டங்கள் கொண்ட தொடர் நடந்து வருகிறது.

இம்மாதம் இறுதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் முதல் ஆட்டம் மழை காரணமாக ரத்தானது. 2வது ஆட்டத்தில் கேப்டன் பட்லர் அதிரடியில் இங்கிலாந்து அபாரமாக வென்று முன்னிலை பெற்றுள்ளது. அதேபோல் முன்னணி அணியான வங்கதேசம், உலக கோப்பை தொடரை நடத்தும் அறிமுக அணி அமெரிக்கா இடையிலான தொடர் சமீபத்தில் முடிந்தது. அந்த தொடரில் முதல் 2 ஆட்டங்களில் அமெரிக்காவும், கடைசி ஆட்டத்தில் வங்கதேசமும் வென்றன.

கடைசி ஆட்டத்தில் வங்கதேசம் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை வசப்படுத்தினாலும், கத்துக்குட்டி அணியான அமெரிக்கா தொடரை கைப்பற்றியது முன்னணி அணிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. அமெரிக்க அணியில் இந்திய வம்சாவளி வீரர்கள் பலர் இடம் பெற்றுள்ளனர். நியூசிலாந்தை சேர்ந்த அதிரடி ஆல் ரவுண்டர் கோரி ஆண்டர்சனும் அந்த அணிக்காக விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் விரைவில் தொடங்க உள்ள உலக கோப்பை தொடரில் எதிர்பாராத திருப்பங்கள் ஏராளமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. உலக கோப்பையின் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா, அயர்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.

The post உலக கோப்பைக்கு தயாராவதில் தடுமாறும் முன்னணி அணிகள்: அசத்தலாக விளையாடும் அமெரிக்கா appeared first on Dinakaran.

Related Stories: