தம்பதியர் ஒற்றுமை மலர வரங்கள் நல்குவார் தேனீசுவரர்

சித்ரா பௌர்ணமி நாளில் சிவதரிசனம் செய்தால் சகல ஞானமும் யோகமும் பெறலாம். ஆனி மாத பௌர்ணமி தினத்தன்று, தேவர்கள் அம்பிகையின் நாமத்தை சொல்லியபடி தியானமும், தவமும் செய்தால் அம்பிகையின் அருள் கிடைக்கும். இந்த நாளில் விரதமிருந்து சிவாலயத்தில் உள்ள முருகப்பெருமானை வழிபட்டால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். புரட்டாசி மாத பௌர்ணமி நாளில் சிவபெருமானை வழிபடுவது பலவித பாவங்களைப் போக்கும் என்று புராணக் கதை கூறுகிறது. ஐப்பசி மாத பௌர்ணமி நாளில் அன்னாபிஷேக வழிபாடு செய்தால், அந்த வருடம் முழுவதும் நல்ல விளைச்சல் இருக்கும், ஊர் செழிக்கும், கலைகள் வளரும், ஈசனை வழிபடும் பக்தர்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள் என்பது நம்பிக்கை.

ஐப்பசி பௌர்ணமி மட்டுமின்றி, சித்திரை முதற்கொண்டு பன்னிரு மாதங்களிலும் வரும் பௌர்ணமி திருநாளில் சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் தலம் இருகாலூர். கொங்கு நாட்டை அக்காலத்தில் இருபத்தி நான்கு உட்பிரிவு நாடுகளாகப் பிரித்திருந்தனர். இருபத்தி நான்கு நாடுகளில் ஒடுவங்க நாடும் ஒன்றாகும். ஒடுவங்க நாட்டில் உள்ள பதினைந்துக்கும் மேற்பட்ட ஊர்களில் இருகாலூர் என்ற இந்த ஊரும் ஒன்று. இந்த ஊரின் கிழக்கு திசையில் ஒரு கால்வாயும், மேற்கு திசையில் ஒரு கால்வாயும் ஓடியதால், இருகால்வாய் ஊர் என வழங்கப்பெற்று வந்து, தற்போது இருகாலூர் என மருவிவிட்டதாகவும், இருகால் என்றால் இரண்டு காற்று என்றும் தென்மேற்குப் பருவக்காற்று, வடமேற்குப் பருவக்காற்று என இரு காற்றுகளால் இப்பகுதியில் பெய்யும் மழையின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு இருகாலூர் என்று பெயர் அமைந்ததாகவும் இரு குறிப்புகள் உள்ளன. நம் நாட்டிற்கு திருக்கோயில்கள் யாவும் ஞான நாற்றங்காலாக அமைந்துள்ளன. அந்த வகையில், இக்கிராமத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன், முன்னோர்களால் சிவாலயம் கட்டப்பெற்று வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றுவந்துள்ளது.

இப்பகுதியை ஆட்சி செய்து வந்த மன்னர்களால் திருப்பணிகள் கண்ட இந்த ஆலயம், அந்நியர் படையெடுப்புகளுக்கு பின்னர் சிதிலமடைந்து, காலப்போக்கில் பராமரிப்பு இல்லாமல் வழிபாடின்றி முற்றிலும் சிதைந்து போய் இருந்தது. பின்னர், கோயம்புத்தூர் மற்றும் இருகாலூரில் சிவபக்தர்களைக் கொண்டு தேனீசுவரர் அருட்பணி மன்றம் துவங்கி 20.10.2002 அன்று திருவாசக முற்றோதலை அடியார்கள் நிகழ்த்தியுள்ளனர். அன்றைய தினமே புதிய இடத்தில் ஆலய திருப்பணி கால்கோள் விழா நடைபெற்றுள்ளது. ஊர்ப் பொதுமக்கள், ஆன்மிக அன்பர்கள், சிவனடியார்கள் பலரது உழைப்பு, பொருளுதவியாலும் திருப்பணி நிறைவு பெற்று 22.01.2006 அன்று விமரிசையாக திருநெறிய தீந்தமிழ்த் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றுள்ளது.

சிவலிங்கத் திருமேனியராக எழுந்தருளி தேனாய் இன்அமுதமாய்த் தித்திக்கும் இறைவனுக்குத் தேனீசுவரர் என்ற பெயராலும், எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பாள் என்பதற்கு ஏற்ப அம்மையும் ஆருயிர்க்குத் தேனாய் அருள்புரிதலால் இறைவி தேன்மொழி அம்மை என்ற பெயராலும் போற்றி வணங்கப்படுகிறார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது திருநெறிய தீந்தமிழ்த் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்று ஆலயம் புதுப் பொலிவுடன் காட்சியளிக்கிறது. கிழக்கு நோக்கிய ஆலயத்தின் அழகிய தோரணவாயிலில் நுழைந்ததும் மகாமண்டபம் உள்ளது. மகாமண்டபத்தில் பலிபீடத்தையடுத்து நந்தியெம்பெருமான் வீற்றிருக்கிறார். அர்த்த மண்டபத்தினுள் நுழையும் முன்னர் விநாயகர், முருகன் தரிசனம் கிடைக்கின்றது. கருவறையில் இறைவி தேன்மொழி அம்மை அற்புத தரிசனம் தருகின்றாள். இறைவி சந்நதியின் இடப்பாகத்தில் உள்ள சந்நதியின் அர்த்த மண்டபத்திற்கு எதிரே பலிபீடம், பலிபீடத்தையடுத்து நந்தியெம்பெருமான் தரிசனம் கிடைக்கின்றது. கருவறையில் இறைவன் தேனீசுவரர் சிவலிங்கத் திருமேனியராக அருள்பாலிக்கிறார். அடிக்கடி வாழ்வில் பிணக்கு ஏற்பட்டு மனக்கசப்படையும் தம்பதியர், இத்தல இறைவனை வேண்டினால் அவர்களுக்குள் ஏற்படும் மனக்கசப்பு நீங்கி வாழ்வில் இனிமை சேர்த்து, தம்பதியர் ஒற்றுமை மலர வரங்கள் நல்குவார் தேனீசுவரர்.

பெரும்பாலான சிவாலயங்களில் இறைவனின் இடப்பாகத்தில் அம்மை சந்நதி கொண்டிருப்பாள். அவிநாசி, கொடுமுடி, குரக்குத்தளி, களந்தை முதலிய இடங்களில் வலப்பாகத்தில் அம்மை அமைந்திருக்கும் நிலை உண்டு. இருகாலூர் தலத்திலும் இதேபோல் அம்மை வலப்பாகத்தில் அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும். இத்தல அம்மனை திருமணமாகாத பெண்கள் வெள்ளிக் கிழமை நாளில் வழிபட்டு வந்தால் திருமணத்தடை நீங்கி விரைவில் மகப்பேறு கிட்டும். கர்ப்பிணி பெண்கள் வேண்டிட அவர்களுக்கு சுகப்பிரசவம் ஆகும்படியும், அவர்கள் கருவை காத்து ரட்சிக்கும் வரத்தையும் வழங்கிடுவாள் அம்பிகை என்கின்றனர் பெண் பக்தர்கள். தல விருட்சங்களாக காசி வில்வமரமும், மகாவில்வ மரமும் உள்ளது. திருக்கோயிலின் பின்புறம், தென்பகுதி, வடபகுதிகளில் பூஜைக்கு தேவையான மலர்களின் செடிகள், கனிகளின் மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. வெளிச்சுற்றில் நால்வர் பெருமக்கள், சண்டிகேசர் தனித் தனி சந்நதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் நிறை நிலவு வழிபாடு என இப்பகுதி பக்தர்களால் போற்றி மாதந்தோறும் இத்தலத்தில் சிறப்பாக வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்த நாளில் பக்தர்கள் அகத் தூய்மை, மனத் தூய்மையுடன் கருவறைக்குள் சென்று தாமே இறைவன் தேனீசுவரருக்கு திருமஞ்சனம் செய்கின்றனர். பக்தர்களே சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வாழ்வில் ஏற்றம் அடைந்தவர்கள் ஏராளம். ஒவ்வொரு பிரதோஷத்தின் போது மாலை 4 மணிக்கு மேல் சிறப்பு வழிபாடு துவங்குகிறது. பிரதோஷ விரதம் மேற்கொண்டு இத்தலம் வந்து வழிபட்டு திருமணம் கைகூடியவர்கள், பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெற்றவர்கள், வாழ்வில் வறுமை நீங்கி சகல காரியங்களில் வெற்றி கிடைத்து, சகல சௌபாக்கியங்களை பெற்றவர்கள் ஏராளம் என்கின்றனர் பக்தர்கள்.

மகா சிவராத்திரி நாளில் நான்கு கால பூஜைகள் சிறப்பாக இத்தலத்தில் நடைபெறுகிறது. இந்நாளில் இப்பகுதியைச் சுற்றியுள்ள பக்தர்கள் திரளாக வழிபாட்டில் கலந்துகொள்கின்றனர். இங்கு பெண்கள் சிவராத்திரி விரதமிருந்து பூஜை செய்கிறார்கள். இதனால், மிகச் சிறந்த கணவன் வாய்க்கப் பெறுகிறார்கள். இந்த திருத்தலம் அமைந்துள்ள இடம்: ஈரோடு மாவட்டம், நம்பியூர் – காவிலிபாளையம் வழியாக புன்செய்ப் புளியம்பட்டி செல்லும் சாலையில் 5 கி.மீ., தொலைவில் இத்திருத்தலம் உள்ளது. இருகாலூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சற்று தூரம் நடந்தால் கோயிலை அடையலாம். பேருந்து வசதி உள்ளது. நம்பியூரிலிருந்து கால் டாக்ஸி, ஆட்டோ வசதி உள்ளது. தரிசன நேரம்: காலை 6 முதல் 11 வரை, மாலை 4 முதல் 7 வரை.

The post தம்பதியர் ஒற்றுமை மலர வரங்கள் நல்குவார் தேனீசுவரர் appeared first on Dinakaran.

Related Stories: