வைகாசி விசாக திருவிழா கரந்தை கருணா சுவாமி கோயிலில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி

 

தஞ்சாவூர், மே 27: கரந்தை கருணாசாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி நேற்றிரவு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் அருகே உள்ள கரந்தையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கருணாசாமி என்ற வசிஷ்டேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா கடந்த 9ம் தேதி அருந்ததி வசிஷ்டர் திருக்கல்யாணத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் படிச்சட்டத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, சூரிய பிரபை வாகனம், சந்திர பிரபை வாகனம் மற்றும் பூத வாகனம், ரிஷப உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. கடந்த 21ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. சப்தஸ்தானம் என்ற ஏழூர் கண்ணாடி பல்லக்கு புறப்பாடு நேற்றுமுன்தினம் நடந்தது.

பெரியநாயகி உடனாகிய கருணாசுவாமி பெரிய கண்ணாடி பல்லக்கிலும், மணக்கோலத்தில் அருந்ததிதேவி உடனுறை வசிஷ்டமகரிஷி சிறிய வெட்டிவேர் பல்லக்கிலும், ஏழூர் சப்தஸ்தான தலங்களான கரந்தை வசிஷ்டேஸ்வரர் கோயில், வெண்ணாற்றங்கரை தஞ்சபுரீஸ்வரர் கோயில், திருதென்குடி திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில், கூடலூர் திருக்கூடலம்பதி சொக்கநாதர் கோயில், கடகடப்பை ராஜராஜேஸ்வரர் கோயில், திருப்புன்னைநல்லூர் கைலாசநாதர் கோயில், கீழவாசல் பூமாலை வைத்தியநாதர் கோயில் ஆகிய ஏழு ஊர்களுக்கும் சென்றது. பின்னர் பல்லக்கு நேற்று முன்தினம் இரவு புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் தங்கியது. நேற்று காலை மீண்டும் அங்கிருந்து பல்லக்கு புறப்பட்டு சின்ன அரிசிக்கார தெரு, கீழவாசல், அரண்மனை உள்பட பல்வேறு இடங்கள் வழியாக கருணா சுவாமி கோயிலுக்கு இரவில் சென்றடைந்தது. இதைத்தொடர்ந்து பல்லக்கில் உள்ள சுவாமி, அம்மனுக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நேற்றிரவு கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

The post வைகாசி விசாக திருவிழா கரந்தை கருணா சுவாமி கோயிலில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: