கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு ஆடுகள் விற்பனை களைகட்டியது ஜோடி ரூ.60 ஆயிரம் வரை விலைபோனது கே.வி.குப்பம் வாரச்சந்தையில்

கே.வி.குப்பம், டிச.16: கே.வி.குப்பம் வாரச்சந்தையில் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு ஆடுகள் விற்பனை களைகட்டியது. இதில் ஒரு ஜோடி ஆடு ரூ.60 ஆயிரம் வரை விலைபோனதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று ஆட்டுச்சந்தை நடக்கிறது. அதன்படி நேற்று காலை கடும் பனிப்பொழிவிலும் ஆட்டுச்சந்தை கூடியது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் லோடு வேன்களில் ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது. வெள்ளாடுகள், முத்து கிடாய் ரகங்கள், நாட்டு ரக கிடாய்கள், செம்மறி ஆடுகள் அதிகம் கொண்டு வரப்பட்டிருந்தது. தரத்துக்கு ஏற்ப ஆடுகளின் விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், வியாபாரிகள் போட்டிப்போட்டு வாங்கிச்சென்றனர்.

இதனால் ஆடுகளின் விற்பனை களைகட்டியது. இதில் ஒரு ஜோடி ஆடு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘கடந்த சில வாரங்களாக விற்பனை மந்தமாக காணப்பட்ட நிலையில், ஆடுகளை விற்பனைக்காக கொண்டுவந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்நிலையில் வரும் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதால், தற்போது ஆடுகள் விற்பனை அமோகமாக நடந்தது. நல்ல எடையுள்ள ஆடுகள் ஜோடி ரூ.60 ஆயிரம் வரை விலைபோனது. வரும் 22ம் தேதி நடைபெறும் சந்தையில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது’ என்றனர்.

Related Stories: