மேல்மருவத்தூர் அருகே அஞ்சூரம்மன் கோயில் தேரோட்டம்

மதுராந்தகம்: மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அஞ்சூரம்மன் கோயிலில் வைகாசி திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி கோயில் மற்றும் கிராம வீதிகள் வண்ணவிளக்குகள் மற்றும் வாழை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன் அஞ்சூரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க கிராம மக்கள் கொண்டு வந்த சீர்வரிசை பொருட்களுடன் அஞ்சூரம்மனுக்கு திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திருமணம் ஆகாதவர்கள் பங்கேற்று, தங்களுக்கு திருமணம் நடைபெற வேண்டி அம்மனை மனம் உருக வணங்கினர். பின்னர் திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய கயிறு, குங்குமம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான கிராம மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா, நேற்று மாலை நடந்தது. அஞ்சூரம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சோத்துப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ரதத்தை வடம் பிடித்து இழுத்து அம்மனை தரிசித்தனர். ஜிஎஸ்டி சாலை பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நிறுத்தப்பட்டதால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் கோயில் நிர்வாகம் மற்றும் விழா குழுவினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

The post மேல்மருவத்தூர் அருகே அஞ்சூரம்மன் கோயில் தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: