25% இடஒதுக்கீட்டின் கீழ் பள்ளியில் சேர்த்திட 28ம் தேதி குலுக்கல்

 

ஈரோடு, மே 25: ஈரோடு மாவட்டத்தில் 2024-2025ம் கல்வியாண்டுக்கான 25% இடஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்த்திட வரும் 28ம் தேதி குலுக்கல் நடைபெறவுள்ளது. இதுகுறித்து, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி 2024-2025ம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25% இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நடப்பு 2024-2025ம் கல்வியாண்டுக்கு கடந்த 22-4-2024 முதல் 20-5-2024 வரை இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 104 மெட்ரிக் பள்ளிகள், 1 சுயநிதி பள்ளி மற்றும் 77 மழலையர், தொடக்கப் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு சேர்க்கைக்கு 2,299 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கு 3,137 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

அந்தந்த பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களைவிட கூடுதலாக விண்ணப்பங்கள் வரப்பெற்ற பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான குலுக்கல், வரும் 28-5-2024 அன்று அந்தந்த பள்ளிகளில் நடைபெறவுள்ளது. எனவே, விண்ணப்பித்த பெற்றோர்கள் தாங்கள் விண்ணப்பித்துள்ள பள்ளிகளில் மேற்குறிப்பிட்ட நாளில் நடைபெறும் குலுக்கலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 25% இடஒதுக்கீட்டின் கீழ் பள்ளியில் சேர்த்திட 28ம் தேதி குலுக்கல் appeared first on Dinakaran.

Related Stories: