சிவகாசியில் விதிமீறி இயங்கிய பட்டாசு ஆலை, குடோனுக்கு சீல் வைப்பு: அதிகாரிகள் அதிரடி

 

சிவகாசி, மே 24: சிவகாசி பிகேஎன் ரோட்டில் சிவகாசி கிழக்கு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் அற்புத குமார் என்பவருக்கு சொந்தமான குடோனில் ஒரு லோடு ஆட்டோ பட்டாசுகள் இறக்கி கொண்டிருந்ததை பார்த்தனர். குடோனில் இறக்கி வைக்கப்பட்ட பட்டாசு பண்டல்களையும் குடோனையும் ஆய்வு செய்ததில் பட்டாசு குடோன் அனுமதியின்றி இயங்கியது தெரியவந்தது.

மேலும் அந்த கட்டிடத்தில் 7 பெட்டிகள் தடை செய்யப்பட்ட சரவெடிகள், நூற்றுக்கும் அதிகமான பட்டாசு பண்டல்கள் இருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அந்த குடோனுக்கு போலீசார் வருவாய்த் துறையினர் மூலம் சீல் வைத்தனர். இதேபோல் சிவகாசி அருகே உள்ள வி.சொக்கலிங்கபுரம் கிராமத்தில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகளில் சிவகாசி தாசில்தார் வடிவேல் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று காலை திடீர் ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த பட்டாசு ஆலையில் சுமார் 25 ஆண், பெண் தொழிலாளர்கள் வழக்கம் போல் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வந்தனர். ஆலையில் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் விதிமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே வருவாய்த்துறை அதிகாரிகள் ஆலை நிர்வாகியிடம் ஆவணங்களை சரி பார்த்த போது அந்த பட்டாசு ஆலை ஏற்கனவே விதிமீறல் காரணமாக தற்காலிக தடை விதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் ஆலைக்கு சீல் வைத்தனர்.

The post சிவகாசியில் விதிமீறி இயங்கிய பட்டாசு ஆலை, குடோனுக்கு சீல் வைப்பு: அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: