யானைகள் வழித்தட விவகாரம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

 

ஈரோடு, மே 24: யானைகள் வழித்தடம் தொடர்பாக விவசாயிகள், பொதுமக்களிடம் கருத்து கேட்ட பிறகு அமல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக கொடிவேரி அணை பவானிநதி பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சுபி.தளபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் 20 யானை வழித்தடங்களை ஒன்றிய அரசு கண்டறிந்துள்ள நிலையில், அவற்றை பாதுகாக்க ஒன்றிய அரசின் சுற்றுப்புறசூழல், காலநிலை மாற்றம், மற்றும் வனத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதே போல தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழு, 42 வழித்தடங்களை தமிழ்நாட்டில் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.  தமிழக அரசால் அடையாளம் காணப்பட்டுள்ள இந்த யானை வழித்தடங்களில், நெடுஞ்சாலைகள், தேயிலை தோட்டங்கள், குடியிருப்புகள், விவசாய நிலங்கள் மட்டுமல்லாது மக்கள் வசிக்கும் ஊர்களும் உள்ளன.

குறிப்பாக நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் பகுதியில் 46 கிராமங்கள் இடம் பெற்றுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் பல மலை கிராமங்கள், மலையடிவார கிராமங்களும் இதில் வருகின்றன. யானைகள் வழித்தடத்தை காப்பாற்ற வேண்டும் என்பது ஏற்புடையது மட்டுமல்லாது அனைவரின் கடமையும் இதில் உள்ளது. அதே வேளையில் விவசாயிகள், கிராம மக்களின் கருத்துகளை கேட்டறிந்து அவர்களின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம், தீர்வு காணப்பட்ட பின்னரே அமல்படுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post யானைகள் வழித்தட விவகாரம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: