சட்டப்பேரவை தேர்தல் அருணாச்சல், சிக்கிமில் இன்று ஓட்டு எண்ணிக்கை

புதுடெல்லி: மக்களவை தேர்தலுடன் சட்டப் பேரவைக்கு தேர்தல் நடந்த அருணாச்சல் பிரதேசம் மற்றும் சிக்கிமில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அருணாச்சல் பிரதேசத்தில் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளும், 2 மக்களவைத் தொகுதிகளும் உள்ளன. இதில் முதல்வர் பெமா காண்டு உள்பட 10 பாஜ வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதால் மீதமுள்ள 50 தொகுதிகளில் கடந்த ஏப். 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது.
இதேபோல் சிக்கிம் மாநிலத்தில் உள்ள 32 சட்டசபைக்கும் ஏப்.19ல் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இங்கு மக்களவை தேர்தலுடன் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அருணாச்சல் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநில சட்டப் பேரவையின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதால், அதற்கு முன்னதாக தேர்தல் நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும் என்பது விதிமுறையாகும். அதனால் ஜூன் 4ம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியிடுவதற்கு முன்பாக இன்று அருணாச்சல் பிரதேசம், சிக்கிம் சட்டப்பேரவைக்கு பதிவான வாக்குகள் எண்ணப்படும். அருணாச்சலில் இன்று காலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு காலை 8 மணிக்கு யார் ஆட்சியை பிடிப்பார் என்ற முன்னணி நிலவரம் தெரிந்து விடும். சிக்கிம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 32 தொகுதிகளில் 17 தொகுதிகளை பிடிக்கும் கட்சி ஆட்சி அமைக்கும். அதே போல் அருணாச்சலபிரதேசத்தில் 31 இடங்களை பிடிக்கும் கட்சி ஆட்சியை அமைக்கும். அங்கு பா.ஜ ஏற்கனவே 10 இடங்களில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் அருணாச்சல் மற்றும் சிக்கிம் மாநிலத்தில் உள்ள மக்களவை தொகுதிகளில் ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

The post சட்டப்பேரவை தேர்தல் அருணாச்சல், சிக்கிமில் இன்று ஓட்டு எண்ணிக்கை appeared first on Dinakaran.

Related Stories: