கூவம் கரையோர ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு: மறியலில் ஈடுபட்ட 100 பேர் கைது

பூந்தமல்லி, மே 18: திருவேற்காடு கூவம் கரையோர ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர். திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பெருமாள் கோயில் தெரு பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குறிப்பாக கூவம் நதிக்கரையையொட்டி மேடான பகுதியில் அமைந்துள்ள இந்த குடியிருப்புகள், மழைக்காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கும் எனவும், நீர் பிடிப்பு பகுதிகளில் இந்த குடியிருப்புகள் இருப்பதாக கூறியும் வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் வருவாய்த் துறையினர் இந்தப் பகுதியில் உள்ள வீடுகளை கணக்கெடுத்து அளவீடு செய்யும் பணிகளையும் மேற்கொண்டனர். இந்நிலையில், வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கணக்கெடுத்த வீடுகளில் நோட்டீஸ் ஒட்டுவதற்கு நேற்று அப்பகுதிக்கு சென்றனர். அப்போது பொதுமக்கள், தங்களின் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் திருவேற்காடு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் அப்பகுதி மக்கள் திடீரென்று பேருந்து நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட திருவேற்காடு நகர் மன்ற துணை தலைவர் ஆனந்தி, திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் லயன் டி.ரமேஷ் உள்பட 100 பேரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். பின்னர், அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து அகற்றப்பட உள்ள வீடுகளில் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. இதனிடையே கைது செய்யப்பட்ட பொதுமக்களை நேற்று மாலை போலீசார் விடுவித்தனர்.

The post கூவம் கரையோர ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு: மறியலில் ஈடுபட்ட 100 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: