பூங்கா, பொது கழிப்பறைகளை சிறப்பாக பராமரிக்க வேண்டும்: மாநகராட்சி ஆணையர் உத்தரவு

சென்னை: அடையாறு மண்டலத்தில், திருவான்மியூர் பேருந்து நிலையம் எதிர்ப்புறம் சாலையில் உள்ள தீவுப் பூங்கா, திருவான்மியூர் பேருந்து நிலைய சந்திப்பு, கஸ்தூரிபாய் நகரில் உள்ள பூங்காக்கள், திருவான்மியூரில் இந்திரா நகர் ரயில் நிலையம் முதல் கஸ்தூரிபாய் நகர் ரயில் நிலையம் வரையிலான மியாவாக்கி எனும் அடர் வனம், மலர் மருத்துவமனை எதிரில் எல்.பி.சாலையில் உள்ள தீவுப் பூங்கா, மல்லிப்பூ நகர் பின்பகுதியில் உள்ள கோட்டூர்புரம் பூங்கா, எம்.ஆர்.சி.நகர் பூங்கா ஆகியவற்றை ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

அப்போது, பூங்காக்கள் மற்றும் மியாவாக்கி எனும் அடர் வனத்தினையும் தொடர்ந்து சிறப்பாகப் பராமரித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அடையாற்றில் கானு நகர் பகுதியில் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பராமரிப்பு குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து, தேனாம்பேட்டை மண்டலம் நொச்சிக்குப்பத்தில், ரூ.15 கோடியில் அமைக்கப்படும் நவீன மீன் அங்காடிப் பணிகளைப் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் லூப் சாலையில் பயன்பாட்டில் உள்ள பொதுக் கழிப்பிடத்தினையும், ராயபுரம் மண்டலத்தில் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் வால்டாக்ஸ் சாலையில் பயன்பாட்டில் உள்ள பொதுக் கழிப்பிடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவற்றை சிறப்பாகப் பராமரித்திட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் சிவானந்தா சாலையில் ரயில் பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள பூங்காவினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பராமரிப்பு மற்றும் மேம்பாடு குறித்து ஆலோசனை வழங்கினார்.

The post பூங்கா, பொது கழிப்பறைகளை சிறப்பாக பராமரிக்க வேண்டும்: மாநகராட்சி ஆணையர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: