சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபருக்கு வலை

சென்னை: சாலையில் நடந்து சென்ற பிளஸ் 2 மாணவியை வழிமறித்து பாலியல் தொந்தரவு செய்துவிட்டு தப்பிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரவாயல் எம்எம்டிஏ காலனியை சேர்ந்தவர் இந்து (39, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு புகார் ஒன்று அளித்தார். அதில், நான் எனது கணவர் மற்றும் மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். எனது கணவர் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார்.

எனது மகள் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 15ம் தேதி மாலை 6.45 மணிக்கு, எனது மகள் வீட்டின் அருகே உள்ள ஜெராக்ஸ் கடைக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பியுள்ளார். 4வது பிளாக்கில் ஆவின் பால் பூத் அருகே உள்ள சந்து வழியாக நடந்து வந்தபோது, ஹெல்மெட் அணிந்து கொண்டு பைக்கில் வந்த வாலிபர் ஒருவர், எனது மகளை வழிமறித்து பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு, வேகமாக பைக்கில் தப்பியுள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் எனது மகள் நடந்த சம்பவத்தை கூறி அழுதார்.

இந்த சம்பவத்தால் எனது மகளுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனது மகளுக்கு நடந்தது போன்று வேறு எந்த சிறுமிகளுக்கும் நடக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட நபர் யார் என்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்து இருந்தார். அதன்பேரில், அனைத்து மகளிர் போலீசார், எம்எம்டிஏ காலனி 4வது பிளாக் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் பைக் பதிவு எண்ணை வைத்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

The post சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: