குறுகிய காலத்தில் பல கோடி சேர்த்தது எப்படி? யூடியூபர் சங்கரின் சொத்துகளை ஆய்வு செய்ய வேண்டும்

* வருமான வரித்துறை அலுவலகத்தில் தமிழர் முன்னேற்றப் படை நிறுவனர் வீரலட்சுமி மனு

சென்னை: வருமானம் இல்லாமல் குறுகிய காலத்தில் யூடியூபர் சங்கர் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் சேர்த்தது குறித்து, முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழர் முன்னேற்றப்படை நிறுவனர் வீரலட்சுமி, வருமான வரித்துறை அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் தமிழர் முன்னேற்றப் படை நிறுவனர் வீரலட்சுமி நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதன் பிறகு நிருபர்களிடம் வீரலட்சுமி பேசியதாவது: விஜிலென்ஸ் அலுவலகத்தில் கிளர்க்காக பணியாற்றி, பின்னர் பணி நீக்கம் செய்யப்பட்ட சங்கரிடம் குறுகிய காலத்தில் இவ்வளவு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் எப்படி குவிந்தன? அவரது ஆசை நாயகிக்கு பல கோடி ரூபாய் சொத்துகளை சங்கர் வாங்கி கொடுத்திருப்பதாகவும், கருப்பு பணத்தில் சொத்துகளை சங்கர் குவித்திருக்கலாம் என்றும் சொல்லப்படுவதை வருமானத்துறை முறையாக விசாரிக்க வேண்டும் என்று கோரி மனு அளித்துள்ளேன்.

அரசுப் பணியில் இருந்த சங்கரின் தந்தை இறந்த பிறகு கருணை அடிப்படையில் சங்கருக்கு விஜிலென்ஸில் வேலை கிடைத்துள்ளது. மேலும், சங்கரின் மனைவி மாதம் ரூ.2 ஆயிரம் ஜீவனாம்சம் கேட்டுப் போராடி வருகிறார். அவருக்கு பணம் கொடுக்க முடியாத சங்கர், தனது ஆசை நாயகிக்கு மட்டும் எப்படி சொத்துகளை வாங்கிக் கொடுத்தார்?. காவல்துறையில் பணியாற்றும் பெண்களை இழிவாகப் பேசும் யூடியூபர் சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்ட் ஆகிய இருவரும் சமூகத்திற்கு எதிரானவர்கள்.

பெண்களை இழிவுபடுத்தி வீடியோக்களை பதிவிட்ட இருவரும், `தோழர்’ என்ற வார்த்தையை பயன்படுத்த அருகதை இல்லாதவர்கள். மாணவி ஸ்ரீமதி மரணத்தில் பிணத்தை வைத்து பணம் சம்பாதித்தவர் சங்கர். இவருக்குப் பின்புலமாக இருந்து செயல்பட்டவர்கள் யார் என்பதைக் கண்டறிய வேண்டும். குற்றம் செய்தவர்களை விட, குற்றம் செய்யத் தூண்டியவர்களையும் தண்டிக்க வேண்டும் என்பதால், பெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு வீரலட்சுமி பேசினார்.

The post குறுகிய காலத்தில் பல கோடி சேர்த்தது எப்படி? யூடியூபர் சங்கரின் சொத்துகளை ஆய்வு செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: