வாலாஜாபாத் வட்டத்தில் வரும் 26ம்தேதி உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்: காஞ்சிபுரம் கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டத்தில் வரும் 26ம்தேதி ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெறும் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுரையின்படி, மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வுகாண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தினை அறிவித்தார்.

இந்த, திட்டத்தின்படி ஒவ்வொரு மாதமும் (3வது புதன் கிழமையில்) ஒருநாள் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதன்பேரில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்படி வரும் 26ம் தேதி வாலாஜாபாத் வட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

எனவே, இத்திட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க விரும்பும் பொதுமக்கள் வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாலை 4.30 முதல் 6 மணி வரை வழங்கலாம். இம்முகாம் வரும் 26ம்தேதி காலை காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை நடைபெறும்: அதன்படி, முகாம் நடைபெறவுள்ள வட்டம், வாலாஜாபாத் முதல் நாள் காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை:

இ-சேவை மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நியாய விலைக்கடைகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையங்கள், சத்துணவு மையங்கள், நேரடி நெல்கொள்முதல் நிலையம், நகர்ப்புற கூட்டுறவு கடன் சங்கங்கள், விவசாய கிடங்கு, பள்ளிகள் ஆகியவற்றை பார்வையிடப்படும். மேலும், வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், கிராம ஊராட்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் ஆகிய அரசு அலுவலகங்களை ஆய்வு மேற்கொள்ளப்படும்.

திட்டப் பணிகள் ஆய்வு செய்தல் மதியம் 2.30 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை கள ஆய்வின்போது சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் தெரிவித்த கருத்துக்களின் மீது ஆய்வு கூட்டம் நடைபெறும். பிற்பகல் 4.30 மணி முதல் மாலை 6 மணிவரை பொதுமக்களிடம் கலந்துரையாடி கோரிக்கை மனுக்களை பெறுதல் மாலை 6 மணி முதல் அரசு விடுதிகள், பூங்கா, அறிவுசார் மையம், சமூக நலத்துறையின் மூலம் பதிவு செய்யப்பட்ட மையங்கள் மற்றும் பேருந்து நிலையம், பொது கழிப்பிடங்கள், பொதுமக்களின் அன்றாட போக்குவரத்து, அரசு மருத்துவமனைகள் பார்வையிடப்படும்.

மேற்படி, வட்டத்தில் சுற்றுப்பயணம் முடிந்து இரவு தங்குதல். இரண்டாம் நாள் காலை 6 மணி முதல் காலை 8.30 மணி வரை திடக்கழிவு மேலாண்மை, சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகள், குடிநீர் வசதி, பொதுமக்களின் அன்றாட போக்குவரத்து, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் முதலியவற்றை பார்வையிட்டு, காலை 9 மணிக்கு சுற்றுப்பயணம் முடிவுற்று தலைமையிடத்திற்கு திரும்பப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post வாலாஜாபாத் வட்டத்தில் வரும் 26ம்தேதி உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்: காஞ்சிபுரம் கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: