உடல் உறுப்புகளை தானம் செய்த வாலிபரின் உடலுக்கு சார் ஆட்சியர் அஞ்சலி

திருப்போரூர்: திருப்போரூரில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட வாலிபரின் உடலுக்கு, சார் கலெக்டர் நாராயணசர்மா நேரில் அஞ்சலி செலுத்தினார். திருப்போரூர் புதுத்தெருவில் வசித்து வந்தவர் அய்யப்பன் (34). தனியார் கார் தொழிற்சாலை ஒன்றில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவர், கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் வீட்டிலேயே படுத்த படுக்கையாக இருந்தார்.

கடந்த 19ம்தேதி அய்யப்பனுக்கு உடல்நிலை மோசமடைந்ததால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக சகோதரர் சரவணன், சகோதரி இன்பவள்ளி ஆகியோர் தெரிவித்தனர்.

இதை ஏற்றுக்கொண்ட மருத்துவர்கள் அய்யப்பனின் 2 கண்கள், 2 இதய வால்வுகள், 2 சிறுநீரகங்கள், கல்லீரல் உள்ளிட்ட 7 உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்து, பல்வேறு நோயாளிகளுக்கு பொருத்தினர். இதையடுத்து, பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் சகோதரரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது, உடலுக்கு செங்கல்பட்டு மாவட்ட சார் ஆட்சியர் நாராயணசர்மா, தமிழ்நாடு அரசின் சார்பில் அஞ்சலி செலுத்தினார். திருப்போரூர் வட்டாட்சியர் வெங்கட்ரமணன், அதிகாரிகள் உள்ளிட்டடோர் உடனிருந்தனர்.

The post உடல் உறுப்புகளை தானம் செய்த வாலிபரின் உடலுக்கு சார் ஆட்சியர் அஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: