ஏற்காடு சுற்றுலா சென்றபோது வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகை கொள்ளை

திட்டக்குடி, மே 14: திட்டக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 21 பவுன் மற்றும் ரூ.55 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஓம்பிரகாஷ்(42). இவர் கடந்த 22 ஆண்டுகளாக கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சி வதிஷ்டபுரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். திட்டக்குடியில் பவானி கிளாஸ், பிளைவுட் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், ஓம்பிரகாஷ் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணி அளவில் குடும்பத்துடன் சேலம் பகுதியில் உள்ள ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்றனர். பின்னர் சுற்றுலா முடிந்து மீண்டும் நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது, வீட்டின் முன் பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின் வீட்டின் உள்ளே சென்று அறையில் இருந்த பீரோவை பார்க்கையில், பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 21 பவுன், 1 3/4 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ. 55 ஆயிரம் ரொக்கம் போன்றவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது. இது குறித்து தகவலின் பேரில், திட்டக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ஏற்காடு சுற்றுலா சென்றபோது வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகை கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: