தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபடும் மோடி மீது நடவடிக்கை எடுக்க தயக்கம்: தேர்தல் ஆணையம் மீது துரை வைகோ குற்றச்சாட்டு

திருச்சி: திருச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளரான மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ நேற்று, வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய திருச்சி ஜமால் முகமது கல்லூரிக்கு வந்தார்.

அப்போது அவர் அளித்த பேட்டி: அடுத்தடுத்த கட்டங்களாக நடந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியின் பலம் அதிகரித்திருப்பது பாஜ நிர்வாகிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பிரதமர் எவ்வாறு பேச வேண்டும் என்ற தகுதியறியாமல் மோடி பேசி வருகிறார். ஜாதி, மதங்களை முன்னிலைப் படுத்தி தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என்பது விதி. ஆனால் விதிமுறைகளை மதிக்காமல் பிரதமர் ஜாதி, மதங்களை முன்னிலைப்படுத்தி ஓட்டு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். விதிகளை மீறும் பிரதமர் மீது இந்தியா கூட்டணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டும், இதுவரை தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தேர்தல் ஆணையத்தின் செயல் பாரபட்சமானது.

மூன்று கட்ட தேர்தல் முடிந்த நிலையில் இந்தியா கூட்டணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. எனவே விரக்தியடைந்துள்ள பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜ தலைவர்கள் ஜாதி, மதம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்தது, நீதிக்கு கிடைத்த வெற்றி. இந்தியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி.இவ்வாறு அவர் கூறினார்.

The post தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபடும் மோடி மீது நடவடிக்கை எடுக்க தயக்கம்: தேர்தல் ஆணையம் மீது துரை வைகோ குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: