நெல்லையில் பசுபதிபாண்டியன் ஆதரவாளர் கொலை எதிரொலி?வாசுதேவநல்லூர் அருகே நள்ளிரவில் அடுத்தடுத்து அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

*பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் அட்டூழியம்

சிவகிரி : வாசுதேவநல்லூர் அருகே நள்ளிரவில் அரசு பஸ்கள் மீது கல்வீசி தாக்கி கண்ணாடியை உடைத்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.தென்காசியில் இருந்து மதுரைக்கு நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. விருதுநகர் மாவட்டம் சுந்தரபாண்டியம் சாலியர் தெற்கு தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் மாரிமுத்து (49) என்பவர் பஸ்சை ஓட்டிச் சென்றார். வத்திராயிருப்பு வடக்கு அக்ரகாரத்தைச் சேர்ந்த சந்திரன் மகன் பெரியசாமி (49) என்பவர் நடத்துனராக இருந்தார். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 35 பேர் பயணித்தனர்.

பஸ் திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வாசுதேவநல்லூர் அருகே திருமலாபுரம் விலக்கு பகுதியில் நள்ளிரவு 12 மணியளவில் சென்ற போது 4 இருசக்கர வாகனத்தில் முகத்தில் துணியை கட்டி மறைத்தவாறு வந்த 12 பேர் கும்பல் பஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் பஸ் நின்றதையடுத்து அக்கும்பல் பஸ்சின் கண்ணாடி, விளக்குகள் அனைத்தையும் உடைத்துவிட்டு வாகனங்களில் தப்பி சென்றனர்.

இதுகுறித்து டிரைவர் மாரிமுத்து, கண்டக்டர் பெரியசாமி கொடுத்த புகாரின் பேரில் வாசுதேவநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இதையடுத்து புளியங்குடி டிஎஸ்பி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர்கள் (சிவகிரி) சண்முகலட்சுமி, (வாசு) கண்மணி ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து ஐந்து, ஐந்து பஸ்களாக போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

போலீசாரின் தீவிர விசாரணையில், பாளையில் பசுபதி பாண்டியனின் ஆதரவாளரான மூன்றடைப்பு வாகைக்குளத்தை சேர்ந்த தீபக்ராஜன் என்பவர் நேற்று முன்தினம் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அதன் எதிரொலியாக இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டர் கண்மணி, சந்தேகத்தின்பேரில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்.

மற்ெறாரு சம்பவம்: இதுபோல் வாசுதேவநல்லூரில் இருந்து நள்ளிரவு சங்கரன்கோவில் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை சங்கரன்கோவில் அம்பேத்கர் நகர் முதல் தெருவைச் சேர்ந்த டிரைவர் கணபதி மகன் குமார்(48) ஓட்டினார். பெரும்பத்தூரைச் சேர்ந்த வெள்ளப்பாண்டி மகன் சங்கர் (56) நடத்துநராக பணியில் இருந்தார். சங்கனாப்பேரி பகுதியில் பஸ் சென்றபோது அடையாளம் தெரியாத 2 பேர், பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது செங்கல் வீசி தாக்கினர்.

இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்து குத்தியதில் டிரைவர் குமார் காயமடைந்ததார். பஸ்சில் பயணம் செய்த பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து டிரைவர், கண்டக்டர் அளித்த புகாரின் பேரில் வாசுதேவநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். வாசுதேவநல்லூர் பகுதியில் நள்ளிரவில் அரசு பஸ்கள் மீது கல்வீசி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிரைவர், கண்டக்டருக்கு பாராட்டு

அரசு பஸ்சில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் சுமார் 35 பேர் இருந்துள்ளனர். திருமலாபுரம் விலக்கில் மர்ம கும்பல் கல்வீசி தாக்கியதும் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் பயத்தில் சாலையில் ஓடினர். அப்போது டிரைவரும், கண்டக்டரும் தங்களுக்கு தெரிந்த, ஆட்டோக்களை வரவழைத்து பயணிகளை வாசுதேவநல்லூர், சிவகிரிக்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர். அவர்களின் செயலுக்கு பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.

The post நெல்லையில் பசுபதிபாண்டியன் ஆதரவாளர் கொலை எதிரொலி?வாசுதேவநல்லூர் அருகே நள்ளிரவில் அடுத்தடுத்து அரசு பஸ் கண்ணாடி உடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: