சத்துவாச்சாரியில் பட்டப்பகலில் பயங்கரம் முன்விரோத தகராறில் லாரி டிரைவருக்கு சரமாரி வெட்டு

* ஆட்டோவில் வந்த 5 பேர் கும்பல் வெறிச்செயல்

* ரவுடிகளை அடக்க எஸ்பி நடவடிக்கைக்கு கோரிக்கை

வேலூர் : சத்துவாச்சாரியில் பட்டப்பகலில் நடுரோட்டில் லாரி டிரைவர் சரமாரியாக கத்தியால் வெட்டப்பட்டார். இதுதொடர்பாக 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் அடுத்த அலமேலுமங்காபுரம் கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணாச்சி(எ)முத்துகிருஷ்ணன்(33), டிப்பர் லாரி டிரைவர். இவர் நேற்று காலை லாரியில் மண் ஏற்றிக்கொண்டு சத்துவாச்சாரி நோக்கி வந்து கொண்டிருந்தார். காலை 10.30 மணியளவில் ஆவின் அருகே சர்வீஸ் சாலையில் வந்தபோது லாரி பழுதாகி நின்று போனது. இதனால் லாரியை முத்துகிருஷ்ணன், அருகே உள்ள மெக்கானிக் ஷாப் அருகில் நிறுத்தினார்.

பின்னர் அவரும், கிளீனரும் லாரியில் ஏற்பட்ட பழுதை சரி செய்து கொண்டிருந்தனர். அப்போது அதே சர்வீஸ் சாலையில் ஆட்டோவில் வந்த 5 பேர் கும்பல் திடீரென முத்துகிருஷ்ணனை சுற்றி வளைத்து சரமாரியாக கத்தியால் வெட்டியது. இதில் தலையிலும், கைகளிலும் வெட்டுபட்ட முத்துகிருஷ்ணனின் கைவிரல்கள் துண்டானது. தாக்குதலை நடத்திய கும்பல் மின்னல் வேகத்தில் அதே ஆட்டோவில் ஏறி தப்பிச் சென்றது.

இந்த திடீர் தாக்குதலில் நிலைகுலைந்து கீழே சாய்ந்த முத்துகிருஷ்ணனை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த டிஎஸ்பி திருநாவுக்கரசு, சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், ஏரியூர் டாஸ்மாக் பார் சூறையாடப்பட்ட சம்பவம், கோயில் திருவிழா தகராறு போன்ற முன்விரோதத்தில் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் வந்துள்ளது.

மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது வசூர் ராஜா கூட்டாளிகளா? என்ற ேகாணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பிய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் நடந்த இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் முன்பு சத்துவாச்சாரி சாைல கெங்கையம்மன் கோயில் அருகே இறைச்சி கடைக்காரர் ஒருவரிடம் மாமூல் கேட்டு ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இப்படி சத்துவாச்சாரி பகுதியில் ரவுடிகள் அட்டகாசம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. எனவே ரவுடிகும்பலை வளரவிடாமல், ஆரம்பத்திலேயே இரும்பு கரம் கொண்டு ஒடுக்க மாவட்ட எஸ்பி உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post சத்துவாச்சாரியில் பட்டப்பகலில் பயங்கரம் முன்விரோத தகராறில் லாரி டிரைவருக்கு சரமாரி வெட்டு appeared first on Dinakaran.

Related Stories: