பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு: யூடியூபர் சங்கரை கைது செய்த திருச்சி போலீஸ்

திருச்சி, மே 9: பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சங்கரை திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். மேலும், சங்கர் மீது பெண் காவலர்கள் பலர் புகார் அளித்துள்ளனர். தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரியும் பெண் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை இழிவுபடுத்தும் வகையிலும், ஆபாசமாகவும், மேலும் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் யூடியூப் சேனலில் யூடியூபர் சங்கர் பேசும் வீடியோவை ரெட்பிக்ஸ் 24/7 சேனல் வெளியிட்டது. சங்கரின் இந்த வீடியோ, பெண் காவலர்கள் மட்டுமல்லாமல் பெண்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதைத்ெதாடர்ந்து தேனியில் சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் சங்கரின் வீடியோவால், காவல் துறையில் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு தற்போது திருச்சி மாவட்டம் முசிறி உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும் யாஸ்மின் மிகுந்த மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டார். இதுதொடர்பாக டிஎஸ்பி யாஸ்மின் கொடுத்த புகாரின்பேரில், திருச்சி மாவட்டம் சைபர் க்ரைம் போலீசார், சங்கர் மீது ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், பெண்களை இழிவுபடுத்துதல், தகவல் தொழில்நுட்ப சட்டம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வீடியோ தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவலர்கள் பலர், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை தொடர்ந்து, திருச்சி மாவட்ட கணினிசார் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடிலிங்கம் தலைமையிலான போலீசார் நீதிமன்ற உத்தரவு பெற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சங்கரை நேற்று கைது செய்தனர். இந்தவழக்கில் இரண்டாம் குற்றவாளியான யூடியூப் சேனல் மற்றும் அதன் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு மீது குற்ற நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக சட்ட ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு: யூடியூபர் சங்கரை கைது செய்த திருச்சி போலீஸ் appeared first on Dinakaran.

Related Stories: