‘மேட்ரிமோனியல்’ இணையதளம் மூலம் 7 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த ‘டுபாக்கூர்’ தொழிலதிபர் கைது: 24 பெண்களிடம் கைவரிசை காட்டியது அம்பலம்

மும்பை: ‘மேட்ரிமோனியல்’ இணையதளம் மூலம் 7 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட ‘டுபாக்கூர்’ தொழிலதிபர் கைதான நிலையில், அவர் 24 பெண்களிடம் கைவரிசை காட்டியது அம்பலமாகி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அடுத்த பைடோனி பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர், ஆன்லைன் திருமண மையமான ‘மேட்ரிமோனியல்’ இணையதளத்தில் தனது பெயரை பதிவு செய்திருந்தார்.

அவரை தொடர்பு கொண்ட ஒருவர், அந்த ஆசிரியையை திருமணம் செய்து கொள்வதாக விருப்பம் தெரிவித்தார். அதனை நம்பிய ஆசிரியையிடம், திருமணத்திற்கு பிறகு மும்பையின் பைகுல்லா பகுதியில் புதியதாக பிளாட் வாங்கித் தருவதாக கூறினார். அதற்காக சில லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது எனக் கூறி, பல தவணையாக ரூ.22 லட்சத்தை ஆசிரியையிடம் இருந்து வாங்கியுள்ளார்.

இதற்கிடையே இருவரும் சில இடங்களில் ஜாலியாக சென்று வந்துள்ளனர். ஆனால் அந்த நபர் கூறியபடி, ஆசிரியையை திருமணம் செய்து கொள்ளவில்லை. கொடுத்த பணத்திற்கும் பதில் இல்லை. அதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை, மும்பை போலீசில் புகார் அளித்தார். அவர்கள் வழக்குபதிவு செய்து தலைமறைவாக இருந்த மோசடி நபரை தேடி வந்தனர். இந்நிலையில் தற்போது தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பதுங்கியிருந்த இம்ரான் அலிகான் (40) என்ற அந்த மோசடி நபரை கைது செய்தனர். இதுகுறித்து மும்பை போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட இம்ரான் அலிகானுக்கு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது.

குறைந்தது 7 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். மூன்று பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மகாராஷ்டிரா மட்டுமின்றி மேற்குவங்கம், தெலங்கானா போன்ற பல மாநிலங்களில் 24 பெண்களை ஏமாற்றியுள்ளார். ‘மேட்ரிமோனியல்’ தளத்தில் பதிவு செய்துள்ள விவாகரத்தான இளம்பெண்களையும், பதிவு செய்துள்ள வயதான பெண்களையும் அடையாளம் கண்டு அவர்களிடம் தான் திருமணம் செய்து கொள்வதாக கூறி அவர்களிடம் பழகுவார்.

அந்தப் பெண்கள், அவரது வலையில் விழுந்தவுடன் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து பணமோசடியும் செய்துள்ளார். தொழிலதிபரை போல் தன்னை காட்டிக்கொண்டு, பாதிக்கப்பட்ட பெண்களை ஏமாற்றி உள்ளார். பெரும்பாலும் ஐந்து நட்சத்திர ஓட்டல்களுக்கு அழைத்து சென்று, அவர்களின் நம்பிக்கையை பெற்று மோசடிகளை அரங்கேற்றி வந்துள்ளார். மோசடியால் பெறப்பட்ட பணத்தை, சூதாட்டத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர்.

The post ‘மேட்ரிமோனியல்’ இணையதளம் மூலம் 7 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த ‘டுபாக்கூர்’ தொழிலதிபர் கைது: 24 பெண்களிடம் கைவரிசை காட்டியது அம்பலம் appeared first on Dinakaran.

Related Stories: