கூடுவாஞ்சேரி அருகே நள்ளிரவில் பரபரப்பு 7 சமாதி, கல் மண்டபம் இடித்து தரைமட்டம்: மர்ம நபர்கள் அட்டூழியம்; போலீசார் விசாரணை

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே காயரம்பேடு ஊராட்சியில் நள்ளிரவில் பொக்லைன் இயந்திரம் மூலம் 7 சமாதிகளை இடித்து தரைமட்டமாக்கிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு ஊராட்சியில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஊராட்சிக்கு உட்பட்ட குட்வில் நகருக்கும் திருவேங்கடபுரத்திற்கும் இடையே இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டை ஆக்கிரமிப்பு செய்து பிளாட் போட்டு விற்பனை செய்வதற்காக மர்ம ஆசாமிகள் இயந்திரங்களை எடுத்து வந்து நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் இரவோடு, இரவாக சுடுகாட்டில் இருந்த 7 சமாதிகள் மற்றும் அரிச்சந்திரன் கல் மண்டபம் ஆகியவற்றை இடித்து தரமாட்டமாக்கி விட்டனர்.

மேலும், இரவோடு இரவாக லாரி கொண்டு வந்து அதன் மூலம் அனைத்தையும் வாரிக் கொண்டு எடுத்து சென்றுள்ளனர். இதனை கண்டதும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயகாந்திபுஷ்பராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் தேவராஜ், ஸ்ரீராம், ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு நேற்று காலை 11 மணி அளவில் திரண்டு சென்று மர்ம ஆசாமிகள் மீது புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில், கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் வண்டலூர் தாசில்தார் ராஜேந்திரன், காயம்பேடு விஏஓ, சிவசங்கரி உட்பட வருவாய்த்துறை என சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், இது குறித்த புகாரின்பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து சுடுகாட்டில் உள்ள சமாதிகளையும் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கிய மர்ம கும்பலை அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வலை வீசி தேடி வருகின்றனர்.

The post கூடுவாஞ்சேரி அருகே நள்ளிரவில் பரபரப்பு 7 சமாதி, கல் மண்டபம் இடித்து தரைமட்டம்: மர்ம நபர்கள் அட்டூழியம்; போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: