பீகார் மாநிலத்தில் நீட் தேர்வு ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மேலும் 24 பேர் கைது..!!

பீகார்: பீகார் மாநிலத்தில் நீட் தேர்வு ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மேலும் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு தொடர்பாக ராஜஸ்தான், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இதுவரை 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு தமிழ், இந்தி, ஆங்கிலம் உட்பட 13 மொழிகளில் நாடு முழுவதும் 571 நகரங்களில் 4,750 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இதில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், 13 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் என சுமார் 24 லட்சம் பேர் தேர்வு எழுதினர். வழக்கம் போல், தேர்வறைக்கு அனுமதிக்கும் முன்பாக மாணவ, மாணவிகளிடம் கெடுபிடியான சோதனைகள் செய்யப்பட்டன.

ஆனாலும், அவற்றை எல்லாம் மீறி வடமாநிலங்களில் எப்போதும் போல் நீட் தேர்வில் பல்வேறு மோசடிகள் இந்த முறையும் நடந்திருப்பது அம்பலமாகி உள்ளது. குறிப்பாக தேர்வு நடந்து கொண்டிருக்கும் போதே சமூக வலைதளங்களில் நீட் வினாத்தாள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நீட் வினாத்தாள் குறித்த புகைப்படங்கள் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தன. ராஜஸ்தானில் சவாய் மதோபூரில் உள்ள தேர்வு மையம் ஒன்றில், இந்தி வழி தேர்வு எழுத வந்திருந்த 120 மாணவர்களுக்கு ஆங்கில வழி வினாத்தாள் தரப்பட்டது. பீகாரின் பாட்னாவில் உள்ள சாஸ்திரி நகர் பகுதியில் உள்ள தேர்வு மையத்தில் பிரபல மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்கும் சோனு சிங் எனும் மாணவர், அபிஷேக் ராஜ் என்பவருக்கு பதிலாக தேர்வறையில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி உள்ளார்.

ஆள் மாறாட்டம் செய்த அந்த மாணவரை போலீசார் பிடித்து விசாரித்த போது, மோசடி கும்பல் சம்மந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆள்மாறாட்டம் செய்ய ஒரு மாணவருக்கு ரூ.5 லட்சம் பணம் வாங்கிக் கொண்டு பல தேர்வர்களுக்கு பதிலாக வேறொருவர் தேர்வு எழுதி உள்ளார். இதுதொடர்பான தகவல்களை பிடிபட்ட சோனு சிங் மூலம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், பாட்னாவில் சில லாட்ஜ்களில் மாணவர்கள் தங்கவைக்கப்பட்டு தேர்வுக்கு முந்தைய நாளே வினாத்தாள் குறித்து அவர்களை படிக்க வைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதற்காக ஒரு மாணவருக்கு தலா ரூ.20 லட்சம் வரை பேரம் பேசி வாங்கப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக தேர்வுக்கு முந்தைய நாளே பாட்னா போலீசார் பல்வேறு லாட்ஜ்களில் சோதனை நடத்தி மோசடியில் ஈடுபட்ட நபர்களை பிடித்து விசாரிக்கின்றனர். இந்த விவகாரத்தில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தேர்வுக்கு முன்பாக பயோமெட்ரிக் சோதனையின் போது, ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வந்த 7 பேர் பிடிபட்டனர். ராஜஸ்தானின் ரூ.10 லட்சம் பெற்று ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுத முயன்றதாக பாரத்பூரில் 2 எம்பிபிஎஸ் மாணவர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோல ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு தொடர்பாக ராஜஸ்தான், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 50 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பீகார் மாநிலத்தில் நீட் தேர்வு ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மேலும் 24 பேர் பேரை பீகார் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

The post பீகார் மாநிலத்தில் நீட் தேர்வு ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மேலும் 24 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: