கெஜ்ரிவால் முற்றுகையிடப் போவதாக அறிவித்ததால் டெல்லி பாஜ ஆபீஸ் முன் போலீஸ் குவிப்பு: 144 தடை உத்தரவு; ஆம்ஆத்மி தொண்டர்கள் கைது

புதுடெல்லி: ஆம் ஆத்மி தலைவர்களின் கைதை கண்டித்து டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக கெஜ்ரிவால் அறிவித்த நிலையில், அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீஸ் குவிக்கப்பட்டது.

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து தற்போது அவர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக டெல்லி கோர்ட்டில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி கட்சியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், ஆம்ஆத்மி பெண் எம்பி ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக எழுந்த புகாரில், கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் நேற்று கைது செய்யப்பட்டார். தற்போது அவர் 5 நாட்கள் போலீஸ் கஸ்டடி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

முன்னதாக கெஜ்ரிவால் நேற்று கூறுகையில், ‘ஆம் ஆத்மி எம்பி ராகவ் சத்தா, டெல்லி அமைச்சர்கள் அதிஷி, சவுரப் பரத்வாஜ் ஆகியோரையும் சிறைக்கு அனுப்புவோம் என்று பாஜக கூறுகிறது. எங்களது கட்சியின் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களுடன் நாளை மதியம் (இன்று) பாஜக தலைமை அலுவலகம் நோக்கி பேரணியாக செல்வோம். எங்களில் யாரை வேண்டுமானாலும் பிரதமர் கைது செய்து சிறைக்கு அனுப்பலாம். எங்கள் தலைவர்களை நீங்கள் சிறையில் அடைக்கிறீர்களோ, அதை விட நூறு மடங்கு அதிக தலைவர்களை இந்த நாடு உருவாக்கும்’ என்றார்.

இந்நிலையில் இன்று டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், ‘எங்களது கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனில் வெளியே வந்தாலும் தினமும் அவருக்கு எதிராக சதி செய்து வருகின்றனர். இதனை கண்டித்து பாஜக அலுவலகம் நோக்கி பேரணியாக செல்வோம். ஆனால் போலீசார் அனுமதிக்கவில்லை’ என்றார். அதேநேரம் பாஜக அலுவலகம் அமைந்துள்ள டிடியு மார்க்கில், போலீசார் 144 தடை விதித்திருந்தனர். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு, டெல்லி போலீஸ், விரைவு அதிரடிப்படை, சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பாஜக தலைமை அலுவலகத்திற்கு வெளியே பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்திற்கு முன் அனுமதி பெறாத நிலையில், மதியம் 12 மணி வாக்கில் முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம்ஆத்மி கட்சி தலைவர்கள் பாஜக அலுவலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. போலீசாரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். சிலர் கைது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் ஆம்ஆத்மி அலுவலகத்திற்கு வெளியே கெஜ்ரிவால் பேசுகையில், ‘ஆம்ஆத்மி கட்சி அவர்களுக்கு (பாஜக) சவாலாக அமைந்துவிடக் கூடாது என்பதற்காக, கட்சியின் மூத்த தலைவர்கள் கைது செய்யப்படுகின்றனர். அடுத்த சில நாட்களில் ஆம்ஆத்மி கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்படும் என்று அமலாக்கத்துறை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதனால் லோக்சபா தேர்தல் முடிந்தவுடன், ஆம் ஆத்மி கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும்.

இப்போது ஆம்ஆத்மியின் வங்கிக் கணக்கை முடக்கினால், மக்களிடையே எங்களுக்கு அனுதாபம் கிடைக்கும் என்பதால், அதனை செய்யவில்லை. பாஜகவிடம் மூன்று திட்டங்கள் உள்ளன. வங்கிக் கணக்குகளை முடக்குவது, கட்சியின் அலுவலகத்தை அகற்றுவது, நம்மை வீதிக்கு கொண்டு வருவது ஆகியனவாகும். கடந்த 2015ம் ஆண்டு ஆம்ஆத்மி ஆட்சிக்கு வந்ததில் இருந்து, எத்தனை எத்தனை குற்றச்சாட்டுகளை அவர்கள் (பாஜக) எழுப்பினார்கள்?. இப்போது மதுபானக் கொள்கை முறைகேடு நடந்ததாகச் சொல்கிறார்கள். மற்ற இடங்களில் ரெய்டு நடக்கும் போது, ரூபாய் நோட்டுகள், தங்கம் மீட்கப்படுகிறது. எங்களிடம் இருந்து எதுவும் பறிமுதல் செய்யவில்லை. அவர்கள் (பாஜக) எங்கள் மீது பொய் வழக்குகள் போட்டு கைது செய்தார்கள்’ என்றார்.

தொடர்ந்து டெல்லி பாஜ அலுவலகத்தை முற்றுகையிட கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியினர் பேரணியாக செல்ல முயன்றனர். ஆனால் அவர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

ஸ்வாதி மாலிவால் மறைமுக சாடல்
ஆம்ஆத்மி மாநிலங்களவை எம்பி ஸ்வாதி மாலிவால் வெளியிட்ட பதிவில், ‘பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நிர்பயாவுக்கு நீதி கிடைக்க நாம் அனைவரும் சாலையில் இறங்கி போராடினோம். இன்று 12 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் (ஆம்ஆத்மி) சாலைக்கு வந்துள்ளோம். சிசிடிவி காட்சிகளை மறைத்து தயாரிக்கப்பட்ட வீடியோ காட்சிகளை உருவாக்கிய குற்றவாளியைக் காப்பாற்ற இன்று நாங்கள் சாலைக்கு வந்திருக்கிறோம். சிறையில் இருக்கும் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியாவுக்கு இந்த முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும். அவர் இன்று இருந்திருந்தால், எனக்கு இவ்வளவு மோசமான நிலைமை ஏற்பட்டிருக்காது’ என்று குறிப்பிட்டுள்ளார். ஸ்வாதி மாலிவால் தனது பதிவில், யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் மறைமுகமாக ஆம்ஆத்மியையும், கெஜ்ரிவாலையும் சாடியுள்ளார். ஏற்கனவே அவர் தனது சமூக வலைதள முகப்பு பக்கத்தில் இருந்த கெஜ்ரிவாலின் புகைப்படத்தை அகற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கெஜ்ரிவால் முற்றுகையிடப் போவதாக அறிவித்ததால் டெல்லி பாஜ ஆபீஸ் முன் போலீஸ் குவிப்பு: 144 தடை உத்தரவு; ஆம்ஆத்மி தொண்டர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: