தமிழ்நாடு முழுவதும் 200 மையங்களில் 1.50 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்: இயற்பியல் கேள்விகள் கடினம்; தேர்ச்சி வீதம் குறையும் என அச்சம்

* மதியம் 1.30 மணிக்குள் தேர்வு மைய வளாகத்துக்கு வரும்படி கூறியதால், பெரும்பாலான மாணவ, மாணவிகள் மதிய உணவு உண்ண முடியாத நிலை ஏற்பட்டது.
* தேர்வு அறையில் முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்களை கண்காணிக்க தேசிய தேர்வுகள் முகமை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது.

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் ஆயுஷ் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான நீட் தேர்வு நேற்று நடந்தது. நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதினர். தமிழ்நாடு முழுவதும் 200 மையங்களில் 1.50 லட்சம் மாணவர்கள் கடுமையான சோதனைகளுக்கு பிறகு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், இயற்பியல் பாடப் பகுதியில் இடம் பெற்ற கேள்விகள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். அதனால் தேர்ச்சி வீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் 2024-25ம் கல்வியாண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் சித்தா, ஆயுர்வேதம், யூனானி மற்றும் ஆயுஷ் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான தேசிய அளவிலான மருத்துவ நுழைவுத் தேர்வு என்னும் நீட் தேர்வு நேற்று நடந்தது. நாடு முழுவதும் 24 லட்சம் மாணவ மாணவியர் பதிவு செய்திருந்தனர். தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். நீட் தேர்வு, தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் 557 நகரங்களில் நடைபெற்றது. தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடந்தது. தேர்வு முடிவு ஜூன் 14ம் தேதி வெளியிடப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சம் பேர் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். இந்த ஆண்டு நீட் தேர்வில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 12,730 பேர் பங்கேற்றனர். இவர்களில் மாணவர்கள் 3,647 பேர், மாணவிகள் 9,094 பேர். இவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் 128 மையங்களில் தீவிரமாக நடத்தப்பட்டது. இதில் அதிகபட்சமாக சேலத்தில் 992 மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதுவோருக்கு அந்தந்த மாவட்டங்களில் மொத்தம் 200 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. சென்னையில் 29 மையங்கள் உட்பட, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களையும் சேர்த்து மொத்தம் 36 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால்டிக்கெட்களில் தெரிவித்துள்ள நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது. போக்குவரத்து நெரிசல் மற்றும் வானிலை மாற்றங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு முன்கூட்டியே அதாவது பிற்பகல் 1.30 மணிக்கு முன்பாக வரவேண்டும். அதன்பிறகு வரும் மாணவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஹால்டிக்கெட் மற்றும் அடையாள சான்று இல்லாத மாணவர்களுக்கு அனுமதி கிடையாது. தேர்வர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனைக்கு உட்படுத்தப்படுவர்.தேர்வு மையங்களுக்குள் துண்டு சீட்டுகள், பென்சில் பாக்ஸ், பிளாஸ்டிக் பவுச், கால்குலேட்டர், ஸ்கேல், எலக்ட்ரானிக் பேனா, லாக் அட்டவணை, கையில் அணியும் ஹெல்த் பேண்ட், தோள் பை, பிரேஸ்லெட், தொலைபேசி, மைக்ரோபோன், புளூடூத், இயர்போன், பெல்ட், பர்ஸ்கள், வாட்ச், ஆபரணங்கள், உணவு பொருட்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டது. எளிதில் தெரியும் வகையிலான தண்ணீர் பாட்டில்களை கொண்டு செல்ல அனுமதித்தனர்.

தேர்வு தொடங்கி முதல் ஒரு மணி நேரம் மற்றும் கடைசி அரை மணிநேரம் மாணவர்கள் கழிவறை செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. பாரம்பரிய மற்றும் கலாச்சார, மதம் சார்ந்த ஆடை உடுத்தி வருவோர், சோதனைகளுக்கு வசதியாக பகல் 12.30 மணிக்கே தேர்வு மையத்துக்கு வந்தனர்.மாணவர்கள் சாதாரண செருப்பு, குறைந்த உயரம் உள்ள காலணிகள் அணிந்து வர அனுமதிக்கப்பட்டனர். ஷூ அணிந்து வர அனுமதி மறுக்கப்பட்டது.

கடுமையான சோதனைகளுக்கு பிறகே மாணவ மாணவியர் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மதியம் 1.30 மணிக்குள் தேர்வு மைய வளாகத்தில் வரும்படி கூறியதால், பெரும்பாலான மாணவ மாணவியர் மதிய உணவு உண்ண முடியாத நிலை ஏற்பட்டது. தேர்வு அறையில் முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்களை கண்காணிக்க தேசிய தேர்வுகள் முகமை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது. முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்கள் அடுத்த 3 ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்றும், அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் தேசிய தேர்வு முகமை கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், நேற்று நடந்த நீட் தேர்வில் வழங்கப்பட்ட கேள்வித்தாளில் இயற்பியல் பாடப்பகுதியில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், வேதியியல் பாடப்பகுதியில் இருந்து இடம்பெற்ற கேள்விகள் சற்று கடினமாகவும், இதர பாடப்பகுதியில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் எளிதாகவும் இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். எனவே இந்த நீட் தேர்வில் தேர்ச்சி வீதம் குறைய வாய்ப்புள்ளது என்ற அச்சம் மாணவர்களிடம் நிலவுகிறது. பெரும்பாலானவர்கள் கோச்சிங் சென்டர்களில் படித்தவர்கள் என்பதால் கருத்து சொல்ல தயக்கம் காட்டியதுடன், பயிற்சி பெற்ற நம்பிக்கையில் தாங்கள் வெற்றி பெறுவோம் என்றும் தெரிவித்தனர்.

The post தமிழ்நாடு முழுவதும் 200 மையங்களில் 1.50 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்: இயற்பியல் கேள்விகள் கடினம்; தேர்ச்சி வீதம் குறையும் என அச்சம் appeared first on Dinakaran.

Related Stories: