பழநி கோயிலில் வைகாசி விசாக திருவிழா மே 16ல் துவங்குகிறது

 

பழநி, மே 3: பழநி கோயிலில் வைகாசி விசாக திருவிழா வரும் மே 16ம் தேதி துவங்க உள்ளது. குறிப்பு: ேபழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று வைகாசி விசாகம். 10 நாட்கள் நடைபெறும் இவ்விழா இந்த ஆண்டு வரும் மே 16ம் தேதி துவங்க உள்ளது. அன்றைய தினம் பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் காலை 9 மணி மேல் 9.45 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி- தெய்வானை சமேதரராக முத்துக்குமார சுவாமி சப்பரம், தந்தப்பல்லக்கு, தோளுக்கினியாள், தங்கக்குதிரை, வெள்ளியானை, காமதேனு, ஆட்டுக்கிடா, வெள்ளிமயில், தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் மே 21ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் வள்ளி- தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.

முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மே 22ம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. திருவிழா நடைபெறும் 10 நாட்களும் பெரியநாயகி மம்மன் கோயிலில் பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம், பக்தி இன்னிசை, வீணை இன்னிசை, நாட்டுப்புறப்பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளை பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ் தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

The post பழநி கோயிலில் வைகாசி விசாக திருவிழா மே 16ல் துவங்குகிறது appeared first on Dinakaran.

Related Stories: