பிரஜ்வல் ரேவண்ணா எதிராக மேலும் ஒரு பாலியல் வழக்கு: கர்நாடகம் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் பேட்டி

பெங்களூரு: ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கியுள்ள பாஜக கூட்டணி கட்சி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் ஹாசன் எம்.பி.,யான பிரஜ்வல் ரேவண்ணாவின் சர்ச்சை வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பேசுபொருளாக மாறியது. இந்த விவகாரம் தற்போது அரசியலில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. அதேநேரம், குற்றம் தொடர்பாக விசாரிப்பதற்காக கர்நாடக அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. அக்குழு விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார்.

ஆபாச வீடியோக்கள் வெளியான அன்றே அவர் ஜெர்மனி சென்றதாக சொல்லப்படுகிறது. பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ள நிலையில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. எனினும், அவர் இன்னும் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் தற்போது அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது வழக்கை விசாரித்து வரும் சிறப்பு விசாரணைக் குழு. அதன்படி, இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்களில் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் ஒட்டப்படவுள்ளது.

இந்நிலையில், ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கியுள்ள பாஜக கூட்டணி கட்சி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக தற்போது வரை 2 பெண்கள் புகார் அளித்துள்ளனர். பிரஜ்வல் ரேவண்ணா பலாத்காரம் செய்ததாக மேலும் ஒரு பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களிடம் சிறப்பு தனிப்படை விசாரணை நடத்தி வருவதாக அவர் கூறினார். மேலும், விசாரணையை தனிப்படை துரிதமாக நடத்தி வருகிறது; பாதிக்கப்பட்ட பலரிடம் உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் பரமேஸ்வர் கூறியுள்ளார்.

The post பிரஜ்வல் ரேவண்ணா எதிராக மேலும் ஒரு பாலியல் வழக்கு: கர்நாடகம் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: