தேர்தல் தோல்வி பயத்தால் ஒன்றிய அரசு அச்சம்?.. வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ19 குறைப்பு: சென்னையில் ரூ1911 ஆக நிர்ணயம்


சேலம்: வர்த்தக காஸ் சிலிண்டர் விலை நேற்று ரூ19 குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை,எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில், காஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் 1ம் தேதி மாற்றியமைக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி திடீரென வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு ரூ200 குறைத்தது. தொடர்ந்து செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல், நிலையாக வைத்துக்கொண்டனர். மார்ச் மாதத்தில் மகளிர் தினத்தன்று வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையை ரூ100 குறைத்து பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார்.

இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான (மே) புதிய விலை பட்டியலை நேற்று அதிகாலை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டது. அதில், வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படவில்லை. அதே வேளையில் நடப்பு மாதத்தில் நேற்று ரூ19 குறைக்கப்பட்டது. கடந்த மாதம் சென்னையில் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ1,930 ஆக இருந்த நிலையில் ரூ19 குறைக்கப்பட்டதால் ரூ1911 ஆகவும், சேலத்தில் ரூ1,878.50ல் இருந்து ரூ1,859.50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே டெல்லியில் ரூ1,745.50, மும்ைபயில் ரூ1,699.50, கொல்கத்தாவில் ரூ1,861.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக வர்த்தக காஸ் சிலிண்டர் விலையை குறைக்காத ஒன்றிய அரசு நாடாளுமன்ற தேர்தல் தோல்வி பயத்தில் கடந்த மாதம் ரூ30.50, நடப்பு மாதத்தில் ரூ19 என்று விலை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

The post தேர்தல் தோல்வி பயத்தால் ஒன்றிய அரசு அச்சம்?.. வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ19 குறைப்பு: சென்னையில் ரூ1911 ஆக நிர்ணயம் appeared first on Dinakaran.

Related Stories: