கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளிடம் நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்: கோல்ப் விளையாடி மகிழ்ந்தார்

கொடைக்கானல்: கொடைக்கானலில் சாலையில் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகளிடம் நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு 5 நாள் ஓய்வுக்காக வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி உள்ளார். நேற்று முன்தினம் முழுவதும் ஓய்வில் இருந்த அவர் நேற்று மாலை, கொடைக்கானல் பசுமை பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கோல்ப் மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொண்டும், கோல்ப் விளையாடியும் மகிழ்ந்தார்.

அப்போது அப்பகுதியில் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்த போதிலும் அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாதவாறு முதல்வர் கோல்ப் விளையாடி மகிழ்ந்தார். பின்னர் கோல்ப் மைதானத்திற்கு வெளியே வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், திடீரென்று பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகளை சந்திக்க வேண்டும் என்று கூறி அவர்கள் காத்திருந்த இடத்திற்கு வந்து அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார்.

அப்போது முதல்வர், மூதாட்டி ஒருவரிடம், ‘‘கொடைக்கானலில் ஏதேனும் பிரச்னைகள் உள்ளதா? ஏதேனும் தீர்க்கப்பட வேண்டுமா’’ என அவரிடம் நலம் விசாரித்து விட்டு மீண்டும் கோல்ப் மைதானத்திற்குள் சென்றார். போலீஸ் பாதுகாப்பிற்கு நடுவே முதல்வர், சர்வசாதாரணமாக சாலைக்கு வந்து தங்களிடம் பேசியதால் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

The post கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளிடம் நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்: கோல்ப் விளையாடி மகிழ்ந்தார் appeared first on Dinakaran.

Related Stories: