1 முதல் 5ம் வகுப்பு வரை ‘எமிஸ்’ வலைதளத்தில் 3ம் பருவ மதிப்பெண் பதிவேற்றம் தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு

நாகர்கோவில், ஏப்.26: தொடக்க கல்வித்துறையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பிற்கான மூன்றாம்பருவ தொகுத்தறி மதிப்பெண்களை எமிஸ் வலைதளத்தில் பதிவு செய்தல் வேண்டும் என்று தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்க கல்வி) தொடக்க கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தொடக்க கல்வி 2023-24ம் கல்வியாண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பிற்கான மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பெண்ணை எமிஸ் வலைதளத்தில் பதிவு செய்ய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பெண்களை https://emis.tnschools.gov.in என்ற வலைதளத்தில் உள்ளிட வேண்டும். விடைத்தாள்களை திருத்திய பின்னர் தொகுத்தறி மதிப்பெண்களை (60 மதிப்பெண்கள்) பாட வாரியாக உடன் உள்ளீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. மதிப்பெண்களை உள்ளீடு செய்யும்போது ஏற்படும் ஐயப்பாடுகளுக்கு தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையை பயன்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள 1 முதல் 5ம் வகுப்பிற்கான மதிப்பெண்களை உள்ளீடு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்க கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய மின்தடை
பூதப்பாண்டி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பூதப்பாண்டி மின் விநியோகப்பிரிவிற்குட்பட்ட இறச்சகுளம் பீடரில் உள்ள உயரழுத்த மின்பாதையில் இன்று(26ம்தேதி) பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் இன்று காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை அருள்ஞானபுரம், அம்பலம்திருத்தி, தாழக்குடி ரோடு, இந்திராகாலனி, ஜீவாநகர், துவாரகாநகர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுபோல் தோவாளை மின் விநியோகப்பிரிவிற்குட்பட்ட வெள்ளமடம் உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணி இன்று(26ம் தேதி) நடக்கிறது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை முத்துநகர், சென்பகராமன்புதூர், கண்ணன்புதூர், சோழபுரம், மாதவலாயம், மைதீன்புரம், புழியன்விளை ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post 1 முதல் 5ம் வகுப்பு வரை ‘எமிஸ்’ வலைதளத்தில் 3ம் பருவ மதிப்பெண் பதிவேற்றம் தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: