இதுவரை நடந்த மனுத்தாக்கலில் இந்தியாவிலேயே அதிக சொத்து: தெலுங்குதேசம் வேட்பாளருக்கு ரூ.5,785 கோடி மதிப்பு சொத்து

* தெலங்கானா வேட்பாளர் ரூ.5,300 கோடியுடன் 2ம் இடம்

திருமலை: தெலுங்கு தேசம் கட்சி எம்பி வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.5,785 கோடி மதிப்பு உள்ளதை வேட்புமனுதாக்கலின்போது தேர்தல் பிரமாண பத்திரத்தில் பார்த்த அதிகாரிகள் வியப்படைந்தனர். ஆந்திர மாநிலம் குண்டூர் மக்களவை தெலுங்கு தேசம் கட்சியின் எம்பி வேட்பாளராக டாக்டர் பெம்மாசானி சந்திரசேகர் போட்டியிடுகிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.5,785 கோடி. கடன் ரூ.1,038 கோடி என தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மக்களவை தேர்தலில் இதுவரை மனுத்தாக்கல் செய்த வேட்பாளர்களில் இந்தியாவிலேயே பெம்மாசானி சந்திரசேகர் தான் இவ்வளவு பெரிய அளவில் சொத்துக்களை காட்டியவராக உள்ளார். இதில் பெம்மாசானி சந்திரசேகர் பெயரில் ரூ.2,316 கோடி, அவரது மனைவி ஸ்ரீரத்னா பெயரில் ரூ.2,289 கோடி, அவரது பிள்ளைகள் பெயரில் ரூ.992 கோடி அசையா சொத்துக்கள் உள்ளது. பெம்மாசானி சந்திரசேகரிடம் ரூ.2,06,400 ரொக்கம் இருப்பதாகவும், அவரது மனைவியிடம் ரூ.1,51,800, மகனிடம் ரூ.16,500, மகளிடம் ரூ.15,900 இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பணக்கார வேட்பாளர்களில் பெம்மாசானி சந்திரசேகருக்கு அடுத்தபடியாக தெலங்கானாவின் பி.ஆர்.எஸ் எம்பி பண்டி பார்த்தசாரதி ரூ.5,300 கோடியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். தெலங்கானாவில் பாஜவின் செவெல்லா எம்பி வேட்பாளர் கொண்டா விஸ்வேஸ்வர் குடும்ப சொத்து ரூ.4,568 கோடி, பீகார் எம்.பி. மகேந்திர பிரசாத்தின் சொத்து மதிப்பு ரூ.4,078 கோடி, ஆந்திர மாநிலங்களவை உறுப்பினர் அயோத்தி ராமியின் குடும்ப சொத்து மதிப்பு 2020ல் ரூ.2,577 கோடி எனத் தெரியவந்துள்ளது.

 

The post இதுவரை நடந்த மனுத்தாக்கலில் இந்தியாவிலேயே அதிக சொத்து: தெலுங்குதேசம் வேட்பாளருக்கு ரூ.5,785 கோடி மதிப்பு சொத்து appeared first on Dinakaran.

Related Stories: