ஜெகன் மோகன் ரெட்டி அரசு கொண்டு வந்த ஆங்கில வழி கல்வியை ஒழிப்போம்: ஆந்திராவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

திருமலை: அமராவதியை மீண்டும் தலைநகராக மாற்றவே கூட்டணி வைத்துள்ளோம். பாஜக இருக்கும் வரை யாராலும் தெலுங்கு மொழியை அழிக்க முடியாது என ஆந்திர மாநிலம் அனந்தபூரில் நடந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். ஆந்திராவில் வரும் 13ம் தேதி சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடக்கிறது. தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக அனந்தபூர் மாவட்டம் தர்மவரத்தில் நேற்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் சந்திரபாபு கூட்டணி கட்சிக்கு வாக்கு சேகரிக்க ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் பங்கேற்று பேசியதாவது:

ஆந்திராவில் நிலவும் ஊழல் மற்றும் அராஜகத்தை ஒழிக்க பாஜக, தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திரா முதல்வராக இருந்தபோது சந்திரபாபு சிறப்பான நல்ல நிர்வாகம் நடத்தினார். மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகும், சந்திரபாபு பொருளாதாரக் கொள்கைகளை மிகவும் வலுவாக அமல்படுத்தினார். ஜெகன் மோகன் வந்த பிறகு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. முதலீடுகள் பூஜ்ஜியமாகிவிட்டன, வளர்ச்சியும் இல்லை.

மாநிலத்தின் கடன் மொத்தமாக ரூ.13 லட்சம் கோடியை எட்டியுள்ளது. ஆரோக்கிய ஸ்ரீ காப்பீடு திட்டம் பெரும் ஆரவாரத்துடன் தொடங்கினார். ஆனால் ஒரு ரூபாய் கூட நிதி கொடுக்கவில்லை. எந்த மருத்துவமனைக்குச் சென்றாலும், சிகிச்சை அளிப்பதில்லை.
ஜெகன் மோகன் அரசுப் பள்ளிகளை ஆங்கில வழிக் கல்வியாக்கினார், இதனால் இங்கு தெலுங்கு மொழியின் இருப்பு இல்லாமல் போனது. ஆரம்பக் கல்வி தாய்மொழியில் இருக்க வேண்டும். எனவே, மீண்டும் தெலுங்கு வழி கல்லவியை அறிமுகப்படுத்துவோம். பாஜக இருக்கும் வரை யாராலும் தெலுங்கு மொழியை அழிக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

 

The post ஜெகன் மோகன் ரெட்டி அரசு கொண்டு வந்த ஆங்கில வழி கல்வியை ஒழிப்போம்: ஆந்திராவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: