கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனத்தில் பழுக்க வைத்த ரூ.10 லட்சம் மதிப்பு மாம்பழம், வாழைப்பழங்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி

சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட் பழக்கடைகளுக்கு தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் மா, பலா, வாழை, அண்ணாசி, திராட்சை, ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, சப்போட்டா உள்பட பலவகையான பழங்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கோடைகாலம் தொடங்கிய நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டிற்கு மாம்பழம் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் மாம்பழம் மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றை ரசாயனம் (எத்திலீன்) மூலம் பழுக்கவைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் மற்றும் உணவு பாதுகாப்புதுறை அதிகாரி சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கோயம்பேடு பழ மார்க்கெட்டில் நேற்று அதிகாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 200க்கும் மேற்பட்ட கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த மாம்பழம், வாழைப்பழம் ஆகியவற்றை சோதனை செய்ததில், எத்திலீன் ரசாயனத்தின் மூலம் பழங்களை செயற்கையாக பழுக்க வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான 8 டன் மாம்பழம் மற்றும் வாழைப்பழங்களை அதிரடியாக பறிமுதல் செய்தனர். மேலும், ரசாயனம் கலந்த பழங்களை விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத்துறை சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் கூறுகையில், ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 4 டன் மாம்பழம், 4 டன் வாழைப்பழம் என மொத்தம் ரூ.10 லட்சம் மதிப்பிலான பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ரசாயனம் கலந்த பழங்களை உட்கொள்வதால் உடல்நலக்கோளாறு ஏற்படும். இதுதொடர்பாக வியாபாரிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய நிலையில், அதனை பொருட்படுத்தாமல் ரசாயனம் கலந்த பழங்களை விற்பனை செய்கின்றனர். இனியும் அதுபோல விற்பனை செய்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றார்.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனத்தில் பழுக்க வைத்த ரூ.10 லட்சம் மதிப்பு மாம்பழம், வாழைப்பழங்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: