ஆற்காடு அருகில் திரவுபதி அம்மன் கோயில் மகாபாரத விழாவில் துரியோதனன் படுகளம்

ஆற்காடு : ஆற்காடு அருகே திரவுபதி அம்மன் கோயில் மகாபாரத விழாவில் துரியோதனன் படுகளம் நடந்தது.ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த திமிரி அருகே உள்ள கணியனூரில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் சமேத தர்மராஜா கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் மகாபாரத விழா நடைபெற்று வருகிறது.

அதே போல் இந்த ஆண்டு மகாபாரத விழா கடந்த மாதம் 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் மாலை 2 மணி முதல் 5 மணி வரை மகாபாரத சொற்பொழிவும், இரவில் பொன்னியம்மன் கட்டைக்கூத்து குழுவினரின் நாடகமும் நடந்து வந்தது.

இந்நிலையில் மகாபாரத விழாவின் முக்கிய நிகழ்ச்சியான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. அதனை முன்னிட்டு கோயில் அருகில் உள்ள மைதானத்தில் 100 அடி நீளம் கொண்ட துரியோதனன் உருவம் மண்ணால் வடிவமைக்கப்பட்டது. தொடர்ந்து பீமன், துரியோதனன் வேடமிட்ட நாடகக் கலைஞர்கள் கதாயுதங்களை கையில் ஏந்தி சண்டையிட்டனர். தொடர்ந்து மூன்று முறை மண் சிற்பத்தை வலம் வந்த பிறகு பீமன் துரியோதனனின் தொடையில் கதாயுதத்தால் அடித்து துரியோதனனை படுகளம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து திரவுபதை வேடமிட்டவர் ரத்தம் போன்ற சிகப்பு சாயத்தை கூந்தலில் தடவி சபதத்தை முடித்தார். மேலும் துரியோதனனின் தாயார் காந்தாரி இறந்த தனது மகனை பார்த்து ஒப்பாரி வைத்து அழும் காட்சி நடந்தது. விழாவில் கணியனுர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து செய்தனர். தொடர்ந்து மாலை தீ மிதி விழாவும், இரவு அலங்கரிக்கப்பட்ட சுவாமி திருவீதி உலாவும், தொடர்ந்து நாடகமும் நடந்தது.

The post ஆற்காடு அருகில் திரவுபதி அம்மன் கோயில் மகாபாரத விழாவில் துரியோதனன் படுகளம் appeared first on Dinakaran.

Related Stories: