கொத்தவரங்காய் சாகுபடி செய்து 35 நாளில் அறுவடை தொடங்கலாம் தினமும் ₹2 ஆயிரம் வருமானம் கிடைக்கும்

*மோட்டார் பாசனத்தை பயன்படுத்தி விவசாயிகள் ஆர்வம்

கிருஷ்ணராயபுரம் : கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் மோட்டார் பாசனம் மூலமாக கொத்தவரை காய் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.கொத்தவரை என்பது கொத்தாக காய்கள் உள்ள ஓரளவு வறட்சியைத் தாங்கி வளரும் செடியாகும். இது சுமார் 2 – 3 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை கொண்டது. பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் பயிர் செய்யப்படுகிறது. ஆண்டு முழுவதும் இந்த பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.

பச்சை பச்சேல் எனக் காட்சியளிக்கும் கொத்தவரங்கயாய்,சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவும் வரப்பிரசாதங்களில் ஒன்றாகும்.இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி ஆயியவை நிறைந்துள்ள கொத்தவரங்காய், இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. எப்போதுமே மற்றக் காய்கறிகளை விடக் குறைவான விலைக்கு விற்கப்படும் கொத்தவரையை, இன்றும் கிராமங்களில் வத்தல் செய்வது உண்டு.

கொத்தவரங்காயை உப்பிட்டு அவித்த வெயிலில் காயவைத்து வத்தலாக்கி, சேமித்து வைத்துக்கொள்வார்கள். இதனை அப்படியேக் குழம்பிலும் போடலாம். எண்ணெயில் வறுத்தும் சாப்பிடலாம். வத்தக் குழம்பு வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.இதில் பூசா சதாபகர், பூசா மவுசாமி, பூசா நவுபகார், கோமா மஞ்சரி என பல்வேறு ரகங்கள் உள்ளன.
நல்ல வடிகால் வசதியுடைய மணற்பாங்கான இடத்தில் வளரும். அல்லது வண்டல் மண்ணின் காரத்தன்மை 7.5-8.0 வரை இருத்தல் வேண்டும். உவர்ப்பு நிலங்களிலும் கொத்தவரங்காய் நன்கு வளரும் தன்மையுடையது.

ஜூன் – ஜூலை, அக்டோபர் – நவம்பர் விதைகளைப், பக்கவாட்டில் 15 செ.மீ இடைவெளியில் ஊன்ற வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 10 கிலோ விதைகளை விதைக்க வேண்டும்.
ஆறிய அரிசி கஞ்சியில் 600 கிராம் ரைசோபியம் நுண்ணுயிர் கலவைக் கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும். விதைப்பதற்கு முன்பு சுமார் 15 – 30 நிமிடம் நிழலில் உலர்த்த வேண்டும்.
நிலத்தை நன்கு உழுது பண்பட செய்வது அவசியம். பின் பார் சால்களை 45 செ.மீ இடைவெளியில் அமைக்க வேண்டும்.

கடைசி உழவின் போது ஒரு ஹெக்டருக்கு மக்கிய தொழு உரம் 25 டன், அசோஸ்பைரில்லம் 2 கிலோ, பாஸ்போபேக்டீரியா 2 கிலோ, தழைச்சத்து 50 கிலோ, மணிச்சத்து 50 கிலோ மற்றும் சாம்பல் சத்து 25 கிலோவை அடியுரமாக இடவேண்டும்.நடவு செய்த 30-வது நாளில் ஒரு ஹெக்டருக்கு 20 கிலோ தழைச் சத்தினை மேல் உரமாக இடவேண்டியது அவசியம்.
இலை தத்துப்பூச்சி தாக்கம் ஏற்பட்டால், மீத்தைல் டெமட்டான் 25 இசி 1 மில்லி அல்லது டைமெத்தோயேட் 30 இசி 1 மிலி மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
காய்ப்புழுத் தாக்கினால், காரரைல் 2 கிராம் அல்லது என்டோசல்பான் 2 மிலி என்ற அளவில் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

இலைப்புள்ளி நோய் உருவானால்,மேங்கோசிப் 2 கிராம் என்ற அளவில் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.சாம்பல் நோய் தாக்கத்தைத் தடுக்க 15 நாட்களுக்கு ஒருமுறை நனையும் கந்தகத் தூள் 2 கிராம் என்ற அளவில் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.மகசூல் விதைத்த 90-வது நாளில் 7 – 10 டன் மகசூல் கிடைக்கும்.கிளைகோநியூட்ரியன்ட் (Glyconutrient) என்னும் வேதிப்பொருள் கொத்தவரையில் மிகுதியாக உள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது. கொத்தவரை இலைகள் ஆஸ்துமா நோயைத் தணிக்க வல்லவை.

கொத்தவரையை கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்வது நல்லது. ஏனெனில் இதில் இடம்பெற்றுள்ள இரும்புச்சுத்து, சுண்ணாம்புச்சத்து ஆகியவை குழந்தையின் மூளை, எலும்பு, முதுகுத்தண்டு ஆகியவை சீராக வளர்ச்சி அடைய உதவுகிறது.மிககுறைந்த கலோரி உணவாக இருப்பதால், எடையைக் குறைக்க விரும்புபவர்கள் கொத்தவரங்காயை உணவில் சேர்த்துக்கொள்வது நல்ல பலன் அளிக்கும்.கொத்தவரங்காய் நடவு செய்யப்பட்டு 35 நாட்களில் அறுவடை செய்ய தொடங்கி விடலாம் நாள் ஒன்றுக்கு ஆயிரம் முதல் 2000 வரை வருமானம் ஈட்ட கூடிய சாகுபடி பெயராகும்.

The post கொத்தவரங்காய் சாகுபடி செய்து 35 நாளில் அறுவடை தொடங்கலாம் தினமும் ₹2 ஆயிரம் வருமானம் கிடைக்கும் appeared first on Dinakaran.

Related Stories: