தமிழ்நாட்டில் 25 இடங்களில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது; 6 மாநிலங்களில் கடும் வெப்ப அலை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் நேற்று வெப்ப அலை வீசியது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் 25 இடங்களில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது. தமிழ்நாட்டில் தற்போது வறண்ட வானிலை நிலவி வருகிறது. பசிபிக் கடல் பரப்பில் ஏற்பட்டுள்ள எல்நினோ காரணமாக இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் வெப்பம் தகித்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு, கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ஒடிசா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதற்கேற்ப தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக 3 முதல் 5 டிகிரி வரை வெப்ப அளவு அதிகரித்தது. இந்தியாவை பொறுத்தவரையில் வெப்ப அலையின் உச்ச மாதம் என்பது மே மாதம்தான். தென்னிந்தியாவில் கடந்த 2002ம் ஆண்டு வெப்ப அலை இருந்தது. குறிப்பாக, ஆந்திராவில் கிழக்கு கோதாவரி, பிரகாசம், கோதாவரி ஆகிய இடங்களில் இருந்தது. 2023ம் ஆண்டும் இருந்தது. கடந்த 2022ம் ஆண்டில் டெல்லியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்ப அலை இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

குறிப்பாக ஏப்ரல் மாதம் 104 டிகிரியை தொட்டது. மேலும், ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, விதர்பா ஆகிய மாநிலங்களில் வெப்ப அலை வீசியது. அதற்கு முன்னதாக இந்த மாநிலங்களில் கடந்த 2015ம் ஆண்டும் வெப்ப அலை வீசியது. இந்தியாவை பொறுத்தவரையில் வெப்ப அலை பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வெப்ப அலை எச்சரிக்கையும் விடுக்கப்படுகிறது. குறிப்பாக சமவெளிப் பகுதிகளில் 104 டிகிரி அளவுக்கும், மலைப் பகுதிகளில் 30 டிகிரி செல்சியசுக்கும் வெப்ப அலை உயர்வு ஏற்படும் போது, வெப்ப அலை தாக்க எச்சரிக்கை கவனத்தில் கொள்ளப்பட்டு அதற்கான அறிவிப்பு மற்றும் தடுப்பு ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இந்திய தீபகற்பத்தின் பேரிடர் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியாக இருக்கிறது. சமீபகாலமாக வெப்ப நிலையில் ஏற்படும் உயர்வால் கோடை மற்றும் பருவ மழைக்கு முந்தைய மாதங்களில் வெப்ப அலை பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், மே மாதம் 4ம் தேதி தமிழ்நாட்டில் கத்திரி வெயில் என்னும் அக்னி நட்சத்திரம் வர உள்ளது. சுமார் 25 நாட்கள் தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடும் வெயில் மற்றும் வெப்பத்தில் மக்கள் தவித்து வரும் நிலையில் நேற்று முதல் வெப்ப அலை வீசத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று காலையில் இயல்புநிலையில் வெப்பம் இருந்தது. அது படிப்படியாக அதிகரித்து 11 மணி அளவில் தமிழ்நாடு முழுவதும் 100 டிகிரி என்ற அளவை எட்டியது. பின்னர் இந்த அளவு பெரும்பாலான இடங்களில் அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக உள் மாவட்டங்களில் மதியம் 12 மணி அளவில் 102 டிகிரியை எட்டியது. மதியம் 1 மணி முதல் 2 மணி அளவில் உள் மாவட்டங்களில் 104 டிகிரியை எட்டியது. இதற்கு காரணம் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பத்தின் அளவு நேற்று அதிகரித்தது. அதனால், அனேக இடங்களில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, மதுரை, பொள்ளாச்சி, சுவாமிமலை, சிவகாசி, சிவகங்கை, திருமங்கலம், மேலூர், திருப்பத்தூர், விருதுநகர், வேடச்சந்தூர், மணப்பாறை, அரவக்குறிச்சி, புல்லம்பாடி, பெருந்துறை, வெள்ளக்கோவில், தஞ்சாவூர், திருக்கோவிலூர், செஞ்சி உள்பட 25 இடங்களில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது.

ஈரோடு, கரூர், பரமத்தி ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 108 டிகிரி வெயில் சுட்டெரித்தது. திருச்சி, வேலூர், முசிறி, சேலம் ஆகிய இடங்களில் 106 டிகிரியாகவும் இருந்தது. மேற்கண்ட இடங்களில் அதிகரித்த வெயில் மற்றும் வெப்பத்தால், வெப்ப சலனம் ஏற்பட்டு 14 மாவட்டங்களில் நேற்று மதியத்துக்கு பிறகு லேசான மழை பெய்தது. இந்நிலையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலகீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. அதனால், 26ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், உள் மாவட்டங்களில் காற்றின் ஈரப்பதம் பிற்பகலில் 30 முதல் 50 சதவீதமாகவும், மற்ற நேரங்களில் 40 முதல் 75 சதவீதமாகவும் கடலோரப் பகுதிகளில் 50 முதல் 85 சதவீதமாகவும் இருக்கும். ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2ம் கட்ட தேர்தல் நடத்துவதில் பாதிப்பு வராது

வெப்ப அலை வீசுவதால் 2ம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல் நடத்துவதில் பாதிப்பு வராது என்று தேர்தல் ஆணையத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி தற்போது இரண்டாம் கட்டத் தேர்தல் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடக்க இருக்கிறது. இந்நிலையில் இந்த மாநிலங்களுக்கு விடுக்கப்பட்ட வானிலை முன்னறிவிப்பு இயல்பானதுதான் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் மிருத்துஞ்செய மொகபாத்ரா தேர்தல் குழுவிடம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் வெப்பமான வானிலையால் ஏற்படும் ஆபத்தை தணிப்பதற்கான நடவடிக்கைள் குறித்து விவாதிக்கவும், அதிகரித்து வரும் வெப்ப நிலையைப் புரிந்து ெகாள்ளவும் சம்பந்தப்பட்ட கட்சி மற்றும் வேட்பாளர்களுடன் தேர்தல் ஆணையம் சந்தித்துள்ளது.

ஏப்ரல் 19ல் முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், ஜூன் 1ம் தேதி வரை மேலும் 6 கட்ட தேர்தல்களில் அனல் காற்றின் காரணமாக வாக்கு சதவீதம் பாதிக்கும் என்ற கவலையைப் போக்கும் வகையில் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையம், இந்திய வானிலை ஆய்வு மையம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், மற்றும் மத்திய சுகாதார அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரிகளை உள்ளடக்கிய பணிக்குழு ஒவ்வொரு வாக்குப் பதிவுக்கு 5 நாட்களுக்கு முன்பு வெப்ப அலை மற்றும் ஈரப்பதத்தின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மற்றும் தணிப்பு நடவடிக்கைகள் தேவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் சமீபத்திய ஆலோசனையின்படி வாக்குச்சாவடிகளில் போதுமான ஏற்பாடுகளை உறுதி செய்ய மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தவும் முடிவு செய்துள்ளது. , வாக்குச்சாவடிகளில் வெப்ப அலை தாக்கத்தை தணிக்க செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் 25 இடங்களில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது; 6 மாநிலங்களில் கடும் வெப்ப அலை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: