ஈரோடு மக்களை ஏமாற்றிய கோடை மழை

 

ஈரோடு,ஏப்.20: ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட ஒரு சில பகுதிகளில் மட்டும் லேசாக பெய்த கோடை மழையால் வெப்பம் அதிகரித்துடன், ஆவலுடன் பெருமழையை எதிர்பார்த்திருந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். கடந்த 2 மாதங்களாக-கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே-தினமும் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேலாக வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இந்நிலையில், நாளுக்கு நாள் பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதுடன், கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக இரவிலும் வெப்பத்தின் தாக்கம் இருந்து வருகிறது.

இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த நிலையில், ஈரோடு உள்ளிட்ட 7க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெப்பச் சலன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் நேற்று மாலை 3 மணிக்கு மேல் திடீரென வானம் இருண்டு, வெயில் குறைந்தது. அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட சத்திரோடு, சூளை மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் மட்டும் லேசான மழைத் தூறத் தொடங்கியது.

இதனால் மழையை எதிர்பார்த்திருந்த மக்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில்,சத்தி ரோட்டு பகுதியில் மட்டும் லேசாக சாலையை நனைக்கும் அளவுக்கு தூறிய மழை இரண்டொரு நிமிடங்களில் நின்றுவிட்டது.இதனால் வெப்பம் மேலும் அதிகரித்து பொதுமக்களை மேலும் வியர்வையில் குளிக்கச் செய்தது.இருப்பினும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டாலும், சில நொடிகள் தூறலுடன் நின்று போன இந்த கோடைமழையால் ஈரோடு நகர மக்கள் பெரும் ஏமாற்றத்துக்குள்ளாகினர்.

The post ஈரோடு மக்களை ஏமாற்றிய கோடை மழை appeared first on Dinakaran.

Related Stories: