கோவையில் ஓட்டுக்கு ரூ.2000 பிடிபட்ட பாஜ நிர்வாகி

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த பூலுவபட்டியில் உள்ள ஒரு டீக்கடையில் வைத்து வார்டு வாரியாக வாக்காளர்களுக்கு பணம் வழங்க நோட்டில் பிரித்து வைத்து எழுதிக் கொண்டிருப்பதாக மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் பாஜ கொடி, வாக்காளர் பெயர் மற்றும் முகவரி அடங்கிய பூத் சிலிப் மற்றும் ரூ.81 ஆயிரம் இருந்தது. காரில் வந்தவரிடம் விசாரித்த போது வடிவேலாம்பாளையத்தை சேர்ந்த ஆலாந்துறை பாஜ மண்டல தலைவர் ஜோதிமணி (37) என்பதும், வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு ரூ.2000 கொடுக்க பணத்தை கொண்டு சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் பேரூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஆலாந்துறை போலீசில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி புஷ்பாதேவி புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் ஜோதிமணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post கோவையில் ஓட்டுக்கு ரூ.2000 பிடிபட்ட பாஜ நிர்வாகி appeared first on Dinakaran.

Related Stories: