தமிழர்களை திருடர்கள் என பழிப்பதா? மோடிக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்: வாக்குகளுக்காக அவதூறு பரப்புவதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று முதல்வர் எச்சரிக்கை

* பூரி ஜெகன்நாதர் ஆலய பொக்கிஷ அறையின் தொலைந்த சாவி தமிழகத்தில் உள்ளதாக கூறி அவமதிப்பதா?

சென்னை: பூரி ஜெகன்நாதர் ஆலய பொக்கிஷ அறையின் தொலைந்த சாவி தமிழ்நாட்டில் உள்ளதாக, தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி அவதூறு சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழர்களை திருடர்கள் என பழிப்பதா, வாக்குக்காகத் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் அவதூறு செய்வதைப் பிரதமர் மோடி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
பிரதமர் மோடி நேற்று ஒடிசா மாநிலத்தில் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது, பூரி ஜெகன்நாதர் கோயிலின் பொக்கிஷ் அறையின் சாவிகள் மாயமாகிவிட்டது.

இது தொடர்பான விசாரணை கமிஷன் அறிக்கையை வெளியிடாமல் ஆளும் பிஜூ ஜனதா தளம் மறைக்க முயல்வது ஏன் என்ற கேள்விக்கு விடை தெரிந்தாக வேண்டும். சாவிகள் மாயமான விவகாரத்தில் பிஜூ ஜனதா தளத்திற்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுகிறது. அந்த சாவிகள் தமிழ்நாட்டிற்கு போய்விட்டதாக கூறுகிறார்கள். ஒடிசாவில் பாஜ ஆட்சி அமைத்ததும் வரும் ஜூன் 10ம் தேதி விசாரணை கமிஷன் அறிக்கையை வெளியிடுவோம் என்று பேசினார். பிரதமரின் இந்த அவதூறான பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தேர்தல் பரப்புரையில் நாகரிக வரம்புகளை மீறாமல், கொள்கை – கோட்பாடுகள் – செயல்திட்டங்கள் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் தங்களது ஆட்சியின் சாதனைகளையும் முன்வைத்து வாக்கு சேகரிப்பதில் முன்னுதாரணமாக திகழ வேண்டிய பிரதமர் நரேந்திர மோடி, வெறுப்புப் பேச்சுகளின் மூலம் மக்களிடையே பகை உணர்வையும் – மாநிலங்களுக்கு இடையே குரோதத்தையும் தூண்டி வருவது நாட்டுக்கு நல்லதல்ல.

முன்னதாக, உத்தரபிரதேச மக்களை இழித்தும் பழித்தும் தென்னிந்தியர்கள் பேசுவதாக தமிழ்நாட்டு மக்கள் மீது அபாண்டமான பழியைச் சுமத்தி இருந்தார். மதம், மொழி, இனம் மற்றும் மாநிலத்தின் பெயரால், இன்னொரு தரப்பு மக்களைத் தூண்டிவிடும் செயல் ஆபத்தானது என்று கண்டனத்தை அப்போதே தெரிவித்து இருந்தேன். சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டிய அரசியல் தலைவரே பகையுணர்வைத் தூண்டுவது தவறு என்றும் கூறியிருந்தேன். ஆனாலும் தமிழ்நாட்டு மக்களை மோசமானவர்களாக இழித்தும் பழித்தும் பேசும் வழக்கத்தைப் பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ளவில்லை.

ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, புகழ்பெற்ற ஜெகன்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் தொலைந்துபோன சாவிகள் தமிழ்நாட்டில் இருப்பதாகப் பேசி இருக்கிறார். இது, கோடிக்கணக்கான மக்களால் வணங்கப்படும் பூரி ஜெகன்நாதரை அவமதிப்பதோடு, ஒடிசா மாநிலத்தோடு நல்லுறவும் நேசமும் கொண்ட தமிழ்நாட்டு மக்களை அவமதிப்பதும் புண்படுத்துவதுமாகும். ஜெகன்நாதர் மீது அளவற்ற பக்தி கொண்ட ஒடிசா மக்களை தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகத் தூண்டும் பேச்சல்லவா இது. ஆலயத்தின் பொக்கிஷத்தைக் களவாடும் திருடர்கள் என்ற பழியைத் தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் மோடி சுமத்தலாமா, தமிழ்நாட்டு மக்களை நேர்மையற்றவர்கள் என்று கூறுவது, தமிழ்நாட்டை அவமதிப்பது அல்லவா, தமிழர்கள் மீது மோடிக்கு இத்தனை காழ்ப்பும் வெறுப்பும் ஏன்?

தமிழ்நாட்டுக்கு வரும்போது தமிழ்மொழியை உயர்வாகப் போற்றுவதாகப் பேசுவதும், தமிழர்களைப் போன்ற அறிவாளிகள் இல்லை என்று பாராட்டுவதும், அதேநேரத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் வாக்கு சேகரிக்கும்போது தமிழ்நாட்டு மக்களை திருடர்களைப் போலவும், வெறுப்பு மிகுந்தவர்களாகவும் அந்த மாநிலங்களுக்கு எதிரானவர்களாகவும் பேசுவது இரட்டை வேடம். இதை மக்கள் புரிந்து கொள்வார்கள். வாக்குக்காகத் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் அவதூறு செய்வதைப் பிரதமர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

* மோடியின் பேச்சு, கோடிக்கணக்கான மக்களால் வணங்கப்படும் பூரி ஜெகன்நாதரை அவமதிப்பதோடு, ஒடிசா மாநிலத்தோடு நல்லுறவும் நேசமும் கொண்ட தமிழ்நாட்டு மக்களை அவமதிப்பதும் புண்படுத்துவதுமாகும்.
* ஜெகன்நாதர் மீது அளவற்ற பக்தி கொண்ட ஒடிசா மக்களை தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகத் தூண்டும் பேச்சல்லவா இது.
* ஆலயத்தின் பொக்கிஷத்தைக் களவாடும் திருடர்கள் என்ற பழியைத் தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் மோடி சுமத்தலாமா, தமிழ்நாட்டு மக்களை நேர்மையற்றவர்கள் என்று கூறுவது, தமிழ்நாட்டை அவமதிப்பது அல்லவா, தமிழர்கள் மீது மோடிக்கு இத்தனை காழ்ப்பும் வெறுப்பும் ஏன்?

* அறிவு இருந்தால் சாவியை பிரதமர் கண்டுபிடிக்கட்டும்: வி.கே.பாண்டியன் விளாசல்
ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோயில் பொக்கிஷ அறை சாவிகள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் பேசுகையில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்குரிய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வி.கே. பாண்டியனை குற்றம் சாட்டினார். அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். அவரை குறிவைத்து பிரதமர் மோடி பேசுகையில்,’ பூரி ஜெகநாதர் பொக்கிஷ சாவிகள் தமிழ்நாட்டிற்குச் சென்றிருக்கலாம்’ என்று குறிப்பிட்டார். பிரதமர் மோடிக்கு பதிலளிக்கும் வகையில் வி.கே. பாண்டியன் கூறுகையில்,’இவ்வளவு அறிவு இருந்தால் சாவிகள் எங்கே போனது என்பதை பிரதமர் மோடி கண்டுபிடிக்க வேண்டும். எனவே பிரதமரிடம் நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அவருக்கு கீழ் பல அதிகாரிகள் உள்ளனர். அவருக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கும். அவர் ஒடிசா மக்களை அறிவூட்ட முடியும். பொக்கிஷ விவகாரத்தில் அவர் ஒரு அரசியல் அறிக்கையை வெளியிடுகிறார். எனவே நாங்கள் அதை அப்படியே எடுத்துக்கொள்வோம். பூரிஜெகநாதர் கோயில் பொக்கிஷ அறை நிச்சயமாக திறக்கப்படும். அதற்கான தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு பொக்கிஷ அறை திறப்பு விழாவைக் காண வருமாறு பிரதமரை நாங்கள் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்’ என்றார்.

The post தமிழர்களை திருடர்கள் என பழிப்பதா? மோடிக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்: வாக்குகளுக்காக அவதூறு பரப்புவதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று முதல்வர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: