ஆந்திரா தேர்தலில் தபால் வாக்களிக்க ரூ.5 ஆயிரம் பெற்ற எஸ்ஐ சஸ்பெண்ட்

திருமலை: தேர்தலில் தபால் வாக்களிக்க ரூ.5 ஆயிரம் பணம் பெற்ற எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் மங்களகிரி நகர காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றி வரும் காஜாபாபு, கடந்த மார்ச் மாதம் நடந்த தபால் வாக்குப்பதிவு தேர்தலுக்காக மங்களகிரி காவல் நிலையத்திற்கு பணி இடமாற்றத்தின் கீழ் வந்தார். எஸ்.ஐ காஜாபாபுவுக்கு சொந்த ஊரான குறிச்சேட்டில் வாக்கு உள்ளது. இந்நிலையில் காஜாபாபுவின் உறவினர் ஒருவர், ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்க ரூ.5 ஆயிரம் பெற்றுத்தருவதாக கூறியுள்ளார். மேலும் எஸ்ஐ காஜாபாபுவுக்கு ரூ.5 ஆயிரம் போன் பே மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யும்போது பிரகாசம் மாவட்ட போலீசாரிடம் கட்சி பிரமுகர் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்தியபோது எஸ்ஐ காஜாபாபுவுக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளை மீறிய எஸ்.ஐ மீது நடவடிக்கை எடுக்க குண்டூர் சரக ஐஜி சர்வஸ்ரேஸ்தா திரிபாதிக்கு பிரகாசம் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் அறிக்கை அனுப்பினர். இதனையடுத்து எஸ்ஐ காஜாபாபுவை நேற்று சஸ்பெண்ட் செய்து ஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post ஆந்திரா தேர்தலில் தபால் வாக்களிக்க ரூ.5 ஆயிரம் பெற்ற எஸ்ஐ சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: