428 தொகுதிகளில் தேர்தல் நிறைவு: பிரதமர் மோடி வெளியேற இன்னும் 15 நாள் தான்; காங்கிரஸ் கட்சி உற்சாகம்

புதுடெல்லி: நாடு முழுவதும் 428 தொகுதிகளில் தேர்தல் நிறைவு பெற்றுவிட்டதால் பிரதமர் மோடி வெளியேற இன்னும் 15 நாள் தான் உள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் நேற்று 5வது கட்ட மக்களவை தேர்தல் நடந்தது. இதை தொடர்ந்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கை: நாடு முழுவதும் மக்களவை தேர்தலில் 5 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், 428 தொகுதிகளில் தேர்தல் முடிவுக்கு வந்துள்ளது. இதில் இருந்து பிரதமர் பதவியில் இருந்து மோடி வெளியேற இன்னும் 15 நாட்களே எஞ்சியுள்ளது. மக்களவை தேர்தல் கட்டம் 1 முதல் உருவாகி வரும் போக்குகள் மூலம் இந்தியா கூட்டணிக்கு அதிக பலம் கிடைத்துள்ளது தெரிகிறது. பா.ஜவுக்கு இந்தியாவின் தெற்கு, மேற்கு, கிழக்கு பகுதியில் வெற்றிக்காக திண்டாடும் சூழல் உள்ளது. இதன் மூலம் இந்தியா கூட்டணி ஏற்கனவே 272 இடங்கள் என்ற பாதி அளவை தாண்டிவிட்டதாகத் தெரிகிறது.

மொத்தத்தில் 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவதற்கான வெற்றி பாதையில் இந்தியா கூட்டணி உள்ளது. பிரதமர் பதவியில் இருந்து மோடியின் விலகல் இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு, அதிக வேலையில்லாத் திண்டாட்டம், அரசியலமைப்பை மாற்றும் திட்டம், இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வரும் திட்டம் போன்ற பாஜவின் அச்சுறுத்தல்கள் அனைத்தும் இந்திய வாக்காளர்களின் மனதில் தெளிவாக உள்ளது. இதனால் மோடி இன்னும் 15 நாட்களில் வெளியேறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் வெளியேறும் பிரதமர் வெறித்தனமான வகுப்புவாத பிரசாரத்தை தற்போது கையில் எடுத்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் ஆழ்ந்த தூக்கம் துரதிர்ஷ்டவசமானது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post 428 தொகுதிகளில் தேர்தல் நிறைவு: பிரதமர் மோடி வெளியேற இன்னும் 15 நாள் தான்; காங்கிரஸ் கட்சி உற்சாகம் appeared first on Dinakaran.

Related Stories: