மம்தாவுக்கு ஆதரவாக பேசியதால் கார்கே-ஆதிர்ரஞ்சன் சவுத்திரி மோதலா? மேற்குவங்க காங்கிரசில் திடீர் குழப்பம்

புதுடெல்லி: மம்தாவுக்கு ஆதரவாக கார்கே பேசியதால், அவருக்கும் ஆதிர் ரஞ்சன் சவுத்திரியுடன் மோதல் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் இந்தியா கூட்டணி உடைந்து விட்டது. திரிணாமுல் காங்கிரஸ் தனியாகவும், காங்கிரஸ்- கம்யூனிஸ்ட்டுகள் ஒரு அணியாகவும், பா.ஜ இன்னொரு அணியாகவும் மோதுகின்றன. இதனால் முதல்வர் மம்தாவை, மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்திரி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். கடந்தவாரம் ஆதிர்ரஞ்சன் சவுத்திரி கூறுகையில்,’ மம்தாவை நம்ப முடியாது. அவர் தேர்தல் முடிந்த பிறகு பா.ஜவுடன் இணைவார்’ என்றார். இந்த விமர்சனம் காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கேவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

அவர் கூறுகையில்,’ மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணியில் உள்ளார். இந்தியா கூட்டணி குறித்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி முடிவு எடுக்க மாட்டார். நானும், கட்சியின் மேல்மட்ட தலைவர்களும் தான் முடிவு எடுப்போம். இந்த முடிவில் உடன்படாதவர்கள் வெளியே செல்வார்கள்’ என்று காட்டமாக பதில் அளித்தார். இதற்கு பதிலளித்த ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, ‘என்னையும், எங்கள் கட்சியையும் மேற்குவங்கத்தில் அரசியல் ரீதியாக முடிக்க நினைக்கும் ஒருவருக்கு ஆதரவாக என்னால் பேச முடியாது. இது ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனுக்குமான போராட்டம். அவர்கள் சார்பாக நான் பேசினேன்’ என்றார். இதனால் மேற்குவங்க காங்கிரசில் பதற்றம் ஏற்பட்டது. கொல்கத்தாவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கார்கே படம் அவமதிக்கப்பட்டது.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில்,’ இதுபோன்ற மோசமான ஒழுங்கீனத்தைகட்சி பொறுத்துக் கொள்ளாது’ என்றார். இந்த சம்பவம் குறித்து ஆதிர்ரஞ்சன் சவுத்ரி அதிருப்தி தெரிவித்ததோடு, காவல்துறையில் புகார் அளிக்குமாறு கட்சியினரை கேட்டுக் கொண்டார். இந்த பரபரப்புக்கு மத்தியில் ஆதிர்ரஞ்சன் சவுத்திரியை கட்சியின் போர் வீரர் என்று கார்கே நேற்று வர்ணித்தார். அவர் கூறுகையில்,’நான் ஒரு தனிநபரைப் பற்றி பேச விரும்பவில்லை. ஆதிர்ரஞ்சன் சவுத்திரி காங்கிரஸ் கட்சியின் போர்வீரர். மேலும் மேற்கு வங்கத்தில் எங்கள் கட்சியின் மாநில தலைவர்’ என்றார். இதனால் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

The post மம்தாவுக்கு ஆதரவாக பேசியதால் கார்கே-ஆதிர்ரஞ்சன் சவுத்திரி மோதலா? மேற்குவங்க காங்கிரசில் திடீர் குழப்பம் appeared first on Dinakaran.

Related Stories: