மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவை விமர்சித்த முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாயா ஒரு நாள் பிரச்சாரம் செய்ய தடை

கொல்கத்தா: மக்களவை தேர்தல் பேரணியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை இழிவுபடுத்தும் வகையில் பேசியதை அடுத்து, கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியாக இருந்த, பாஜக வேட்பாளர் அபிஜித் கங்கோபாத்யாயா 24 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இன்று(21.05.2024)மாலை 5 மணி முதல் நாளை(22.05.2024) மாலை 5 மணி வரை இந்த தடை அமலில் இருக்கும்.

பாஜகவின் தமலுக் மக்களவை தொகுதி வேட்பாளரான கங்கோபாத்யாயா, மே 15-ம் தேதி ஹால்டியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது, மேற்கு வங்க முதல்வர் பானர்ஜிக்கு எதிராக பேசியதற்காக திரிணாமுல் காங்கிரஸ் அளித்த புகாரின் பேரில் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் தேர்தல் பிரச்சாரத்தின் போது கங்கோபாத்யாயா தனது பொது வார்த்தைகளில் கவனமாக இருக்குமாறு தேர்தல் ஆணையம் கடுமையாக எச்சரித்துள்ளது.

முன்னாள் நீதிபதியும் பாஜக வேட்பாளருமான அபிஜித் கங்கோபாத்யாய், முதலமைச்சர் மம்தா பானர்ஜி குறித்து தேர்தல் பரப்புரையில் உதிர்த்த வார்த்தைகள்:
“மம்தா பானர்ஜி, என்ன விலைக்கு உங்களை விற்கிறீர்கள்? உங்கள் விலை ரூ.10 லட்சம். ஏனென்றால் நீங்கள் மேக் அப் போடுகிறீர்கள். மம்தா பானர்ஜி ஒரு பெண்தானா? என்ற கேள்வி அடிக்கடி எனக்குள் எழுகிறது” இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

The post மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவை விமர்சித்த முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாயா ஒரு நாள் பிரச்சாரம் செய்ய தடை appeared first on Dinakaran.

Related Stories: