வேட்பாளர் ஆ.ராசா பேச்சு நாளை நாடாளுமன்ற தேர்தல் தயார் நிலையில் வாக்குசாவடிகள்

ஈரோடு, ஏப். 18: நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு நாளை நடைபெற உள்ளதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2,222 வாக்குசாவடிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குசாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நாளை 19ம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக, கடந்த 20ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வந்தது. பின்னர் 30ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதையடுத்து வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்ததையடுத்து வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 198 மண்டலங்களில் மொத்தம் 2222 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினரும், 1,571 உள்ளூர் போலீசாரும் என மொத்தம் 3,896 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடிகள் உள்பட மொத்தம் 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2,222 வாக்குச் சாவடிகளில் 191 வாக்கு சாவடிகள் சமூக மற்றும் பொருளாதார காரணிகளால் பாதிக்கப்படக் கூடிய வாக்குச் சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 1,476 வாக்கு சாவடிகளும், ஈரோடு நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ள 1,112 வாக்கு சாவடிகளும் என 66 சதவீத வாக்குசாவடிகள் நேரடி வெப் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.

மேலும், இந்த வாக்குசாவடிகளில் நுண்பார்வையாளர்கள் மூலமாகவும் நேரடியாக கண்காணிக்கப்படுகின்றது. பேலட் பேப்பர் பொருத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் இன்று காலை முதல் வாக்குசாவடிகளுக்கு எடுத்து செல்லப்பட உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு சாவடிகளுக்கு எடுத்து செல்ல மண்டல மற்றும் காவல் துறை அலுவலர்களை கொண்ட 198 குழுக்கள் ஈரோடு மாவட்டம் முழுவதும் அமைமக்கப்பட்டுள்ளது. ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு மட்டும் 146 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் கொண்டு செல்ல வசதியாக அந்தந்த சட்டமன்ற தொகுதி தலைமையிடத்தில் போலீஸ் பாதுகாப்புடன் வேன்கள் தயார்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வாக்குசாவடிகளில் வாக்குசாவடி அலுவலர் உள்பட மொத்தம் 10,970 ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர, ஒருங்கிணைப்பு பணியில் சுமார் 2,500 பேரை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுவோர் இன்று ஏற்கனவே 3 கட்டங்களாக நடைபெற்ற பயிற்சி மையத்திற்கு சென்று வாக்குசாவடி பணி நியமன ஆணையை பெற்றுக்கொண்டு இன்று மாலைக்குள் சம்மந்தப்பட்ட வாக்குசாவடி யைமத்திற்கு செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்குசாவடிகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்காக ஒவ்வொரு வாக்குசாவடியிலும் சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

3க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் உள்ள மையத்தில், வழிகாட்டும் நபர் நியமிக்கப்பட்டுள்ளார். வாக்குப்பதிவானது நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. முன்னதாக, அதிகாலை 5.30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு, முகவர்கள் முன்னிலையில் நடைபெறும் என்றும் அதன்பிறகு அதில் பதிவான வாக்குகள் அனைத்தும் முழுமையாக அழிக்கப்பட்ட பிறகு சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவை தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் பர்கூர், தாளவாடி, கடம்பூர் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகளில் தொலைபேசி, இன்டெர்நெட் வசதி இல்லாத வாக்குச்சாவடிகளுக்கு, வனத்துறையினர் ‘மைக்’ மூலமாக தொடர்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட மலைப்பகுதியில் மட்டும் 120 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் நாளை 19 லட்சத்து 66 ஆயிரத்து 496 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதே போல ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம், காங்கயம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் நாளை வாக்களிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post வேட்பாளர் ஆ.ராசா பேச்சு நாளை நாடாளுமன்ற தேர்தல் தயார் நிலையில் வாக்குசாவடிகள் appeared first on Dinakaran.

Related Stories: